அமெரிக்க வியூகத்துள் வெளிப்படும் இந்திய-இலங்கை பாதுகாப்பு உடன்படிக்கை
[TamilNet, Sunday, 18 May 2025, 01:31 GMT]
இந்திய-இலங்கை அரசுகள் 2025 ஏப்ரல் மாதம் தமக்கிடையே செய்துகொண்டுள்ள 'பாதுகாப்பு' புரிந்துணர்வு உடன்படிக்கையின் பிரதி ஆங்கில இணைய ஊடகம் ஒன்றில் சில சிங்களத் தரப்புகளால் அண்மையில் கசியவிடப்பட்டுள்ளது. உடன்படிக்கையின் உள்ளடக்கத்தை அதிகாரபூர்வமாக ஒத்துக்கொள்ளவோ மறுதலிக்கவோ இந்திய இலங்கை அரசுகளின் இரண்டு தரப்புகளும் தவிர்த்துவருகின்றன. இருப்பினும், கசிந்துள்ள பிரதியும் இன்றுவரை கசியவிடாது பேணப்பட்டுவருகின்ற 2017 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட அமெரிக்க அக்சா ஒப்பந்தமும் ஒட்டுமொத்தமாகத் தமிழர்களுக்குச் சொல்லும் செய்தியின் ஆபத்தின் ஆழம் எத்தகையது, அதன் புவிசார் அரசியற் தார்ப்பரியம் தான் என்ன, அது எவ்வாறு தமிழ்நாட்டிலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர் தாயகத்திலும் புலம்பெயர் ஈழத்தமிழர் மத்தியிலும் அடுத்த கட்டச் செயலாற்றல் நோக்கிப் புரிந்துகொள்ளப்படவேண்டும் என்பது முள்ளிவாய்க்கால் இன அழிப்பு நினைவேந்தல் காலத்தில் சிந்தனைக்குரியது.
அமெரிக்காவுடன் 2017 ஆம் ஆண்டிலிருந்து நடைமுறையில் இருக்கும் பாரிய அக்சா (Acquisition and Cross-Servicing Agreement, ACSA) ஒப்பந்தத்தின் உள்ளடக்கம் இதுவரை இரகசியமாகப் பேணப்பட்டு வருகிறது.
சர்ச்சைக்குரியதாக 2019 இல் கசிந்திருந்த சோபா (Status Of Forces Agreement, SOFA) ஒப்பந்தத்தின் வரைவு பின்னர் நடைமுறைப்படுத்தப்படும் நிலையை எட்டவில்லை.
அடுத்த கட்டமாக அதை நிறைவேற்ற வேண்டிய அவசரம் அமெரிக்காவுக்கு மீண்டும் ஏற்பட்டுள்ள தற்போதைய சூழலில், 2025 ஏப்ரலில் இந்திய-இலங்கை பாதுகாப்பு புரிந்துணர்வு உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
* * * பாதுகாப்பு ஒப்பந்தகள் மூலமாக புவிசார் அரசியலில் கட்டுகள் போடப்படுகின்றன, அணிகள் நிர்வகிக்கப்படுகின்றன.
உலகின் சிறிய நாடுகளின் அல்லது அரசற்ற தேசங்களின் எழுச்சியும் வீழ்ச்சியும், ஏன் சரணாகதியும் கூட, ஏகாதிபத்தியங்களின் போட்டா போட்டிகளின் இராணுவக் கூட்டுகளால் தீர்மானிக்கப்படுகின்றன.
ஆதலால், பாதுகாப்பு ஒப்பந்தங்களின் உள்ளார்ந்த தன்மைகளை உரிய முறையில் விளங்கிக்கொள்வதும், அவை குந்தகமாயிருக்கும் போது அவற்றுக்கு எதிராகச் செயலாற்றுவதும், போராடும் தேசங்களுக்கு முக்கியமாகின்றன.
செயற்பாடின்றி, ‘தவிர்க்க முடியாத’ தேர்தல் அரசியலுக்குள் மாத்திரம் மூழ்கியிருந்தவாறு, நீட்சியான இன அழிப்பை (protracted genocide) பலவேறு வடிவங்களில் எதிர்கொள்ளும் ஓர் அரசற்ற தேசமோ அன்றேல் மக்கள் கூட்டமோ ஏகாதிபத்தியங்களாலும் அவற்றினால் நிர்வகிக்கப்டும் தரகு அரசுகளாலும் நிரந்தர அழிவுக்கு உள்ளாக்கப்படுவது நியதி.
இந்த ஆபத்தையே தமிழர் தேசங்கள் தற்போது எதிர்கொண்டுள்ளன.
இந்த நியதியை மாற்றியமைக்க ஏகாதிபத்தியங்களுக்கும் அவற்றின் தரகு அரசுகளுக்கும் எதிரான போராட்டத்தால் மட்டுமே இயலும்.
தரகு அரசுகளின் தேர்தல் அரசியல் ஊடாகவோ அல்லது அவற்றுடனான இணக்க அரசியல் ஊடாகவோ இதைச் சாதிக்க இயலாது.
ஆயுதப் போராட்டம் ஒன்று தான் போராட்டம் என்றில்லை.
போராட்டம் என்பது ஒத்துழையாமையில் இருந்து ஆயுதப் போராட்டம் வரையான அகலமான அலைவரிசையைக் கொண்டது.
பல முனைகளாகியுள்ள உலக ஒழுங்குகள் ஒவ்வொன்றுக்குள்ளும் வெவ்வேறு அரசற்ற தேசங்களோடு இணைந்து சுய நிர்ணய உரிமைப் போராட்டமாக ஈழத்தமிழர் போராட்டம் எடுத்தாளப்படுவதும் போராட்டத்தின் ஒரு வடிவமாகும்.
போராட்டத்தின் வடிவம் என்ன என்பதைப் பெரும்பாலும் ஏகாதிபத்தியங்களும் அவற்றின் தரகு அரசுகளும் முன்னெடுக்கும் அரசியலின் போக்கே தீர்மானிக்கிறது.
இந்த வகையில் ஈழத்தமிழருக்குரிய அடுத்த கட்டப் போராட்டத்திற்கான சட்டகம் என்ன என்பதைத் தீர்மானிக்கவேண்டிய காலம் நெருங்கிவிட்டது என்பதையே இந்த ஒப்பந்தங்களும் தேர்தல் அரசியற் போக்குகளும் கோடிகாட்டுகின்றன.
* * * 2007 ஆம் ஆண்டு இன அழிப்புப் போரைத் தீவிரப்படுத்துவதற்கு அவசரமாக அமெரிக்க இலங்கை இரட்டைப் பிரஜையான கோத்தாபய ராஜபக்சவுக்கு அமெரிக்காவுடன் அக்சா உடன்படிக்கை தேவைப்பட்டது.
இந்த உடன்படிக்கையைத் தொடர்ந்து முழுமையான அமெரிக்க நெறிப்படுத்தலிலும் செய்மதிப் புலனாய்வுத் தரவுகளையும் கொண்டு முள்ளிவாய்க்காலுடனான விடுதலைப் புலிகளின் கடற் தொடர்பு முற்றாகத் துண்டிக்கப்பட்டது.
2007 ஜனவரி மாதம் இலங்கையோடு அமெரிக்கா ஏற்படுத்திக்கொண்ட அந்த எட்டுப் பக்க அக்சா ஒப்பந்தம் (பின்னிணைப்புகளோடு 41 பக்கம்) பத்து ஆண்டுகளுக்கான கால எல்லை வரையறையைக் கொண்டிருந்தது.
மறைந்த 'சிங்கப்பூர் தீர்மானம்' புகழ் மங்கள சமரவீரவின் துணையுடன் 2017 ஆம் ஆண்டில் காலாவதியாகவிருந்த அந்த அக்சா ஒப்பந்தத்தை அமெரிக்கா தனது இந்தோ-பசிபிக் இராணுவப் பார்வைக்கு ஏற்றதாக 83 பக்கங்களில் விரிவுபடுத்தி கால எல்லை எதுவுமற்று நீடிக்கத்தக்கதாக புதிதாக அமைத்துக்கொண்டது.
அதைப்போல ஏற்கனவே 1995 இல் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவப் பயிற்சிகளை இலங்கை இராணுவத்துக்குத் தீவிற்குள் நேரடியாகப் பிரசன்னமாகி தனது சிறப்புப் படை அதிகாரிகள் வழங்குவதற்கு ஏதுவாக மேற்கொண்டிருந்த சோபா உடன்படிக்கையை மேலும் விரிவாக்க 2019 ஆம் ஆண்டில் அமெரிக்கா தீவிரமாக முயன்றது.
அதன் வரைவு கசிந்தபோது பலத்த எதிர்ப்பு உருவானது. ஆளும் தரப்புக்குள் பிளவுகள் தோன்றின. வரைவு தொடர்பான விமர்சனம் வலுத்தபடியாலும், சிறிசேன சீனாவுடன் இரகசிய பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்திக்கொள்ளும் அளவுக்குக் 'குழம்பியதாலும்' பின்னர் அது கிடப்பில் போடப்பட்டது.
தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதியாகிய டொனால்ட் ட்ரம்பின் முதலாம் பதவிக்காலத்தில் இந்தோ-பசுபிக் இராணுவப் பார்வை கெட்டியாக வடிவமைக்கப்பட்டது.
இலங்கையுடன் சோபா உடன்படிக்கை விரைந்து மேற்கொள்ளப்படவேண்டும் என்பது தொடர்பாக அமெரிக்க வெளிநாட்டமைச்சரும் முன்னாள் சி.ஐ.ஏ இயக்குநருமான மைக் பொம்பியோ கடும் நெருக்கடியைக் கொடுத்தார்.
தற்போது ட்ரம்பின் இரண்டாம் பதவிக்காலத்தில் சீனா நோக்கி அனைத்துக் கவனமும் திருப்பப்படுகின்ற சூழலில் மீண்டும் இந்த உடன்படிக்கை அமெரிக்காவுக்குத் தேவைப்படும்.
இந்தச் சூழலிலேயே, அடுத்ததாக அமெரிக்கா விரிவுபடுத்த முனைந்து கொண்டிருக்கும் சோபா ஒப்பந்தம் எவ்வாறு கட்டமைக்கப்படுவது பொருத்தம் என்பதற்கு வழிகாட்டும் ஒப்பந்தமாக இந்திய-இலங்கை பாதுகாப்பு உடன்படிக்கை தற்போது வடிவமைக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ஏகாதிபத்திய உடன்படிக்கைகள் மூலவாத்தியம் என்றால் இந்திய உடன்படிக்கை அந்த வியூகத்துக்கு உள்ளடங்கும் ஒரு பக்கவாத்தியம் மட்டுமே.
இந்திய-இலங்கை பாதுகாப்பு உடன்படிக்கை தற்போது கசியவிடப்பட்டுள்ளதன் பின்னணி எதுவாயிருப்பினும் அதன் விளைவு இந்த ஒப்பந்தத்துக்கு எதிரான முனைப்பைக் கூர்மைப்படுத்துவதாக அமைய வேண்டியதில்லை. இலங்கையை ஒரு சமதரப்பாக அது கையாண்டுள்ளது என்ற கருத்தியலை நிறுவுவதற்கும் இந்தக் கசிவு பயன்படும்.
அதாவது, இலங்கையின் ஆளும் தரப்பு தனக்குத் தேவையான கட்டுரைப்பை (narrative) சிங்கள மக்கள் மத்தியில் முன்னெடுப்பதற்கு இதன் விளைவு வழிகோலுவதாக அமைவதற்கே கூடுதலான வாய்ப்பு உண்டு.
சிங்களத் தேரவாத புத்தபீடத்தின் காலில் விழுந்து வணங்கிய இந்தியத் தலைவர் நரேந்திர மோடியின் செயலையும் இங்கே ஒருசேரக் கவனிக்கவேண்டும்.
இலங்கையின் இறைமையை இந்திய இறைமைக்குச் சமாந்தரமானதான அங்கீகாரத்துடன் நிலைநிறுத்துவதால், இலங்கைத் தீவை ஒரு சிறிய நாட்டின் இறைமையைப் போல அமெரிக்க ஏகாதிபத்தியம் எள்ளுக்கீரையாகக் கையாளாமல் பரஸ்பர மரியாதையோடு கையாளவேண்டும் என்ற செய்தியும் இந்த ஒப்பந்தத்தின் வரிகளுக்கு இடையே பொதித்து வைக்கப்பட்டுள்ளது.
ஆக, ஏகாதிபத்தியத் தேவைக்கு சிங்கள மக்களைத் தயார் செய்வதற்கு இந்த உடன்படிக்கையும் அதன் கசிவும் பயன்படும்.
இன்னொரு விதமாகச் சொல்வதானால் இலங்கையின் இறைமையை வலுப்படுத்த இந்தியா தனது இறைமையை இந்த ஒப்பந்தத்தின் ஊடாக மூலதனமாக்கியுள்ளது எனலாம்.
இலங்கைத் தீவை, குறிப்பாக திருகோணமலை போன்ற துறைமுகங்களை அண்மித்த கடலோர நகர்வுகள் போன்ற விடயங்கள் ஏற்கனவே ஏற்படுத்தப்பட்டுள்ள அமெரிக்க-இலங்கை அக்சா உடன்படிக்கைக்குள் உள்ளடங்கியுள்ளன.
குறிப்பாக, இலங்கையோடு அமெரிக்க விரிவுபடுத்தவுள்ள அடுத்த ஒப்பந்தம் தரையில் அமெரிக்கப் படையினரின் இறைமை பற்றியதாக இருக்கும்.
சீனாவுக்கு எதிரான அணிவகுப்பும் தென்னுலகத்தின் (Global South) எழுச்சியும் முரண்பட்டுக்கொண்டிருக்கும் தற்போதைய பல்துருவ உலக அரசியலில் அமெரிக்க-இந்திய, அமெரிக்க-இலங்கை, இந்திய-இலங்கை பாதுகாப்பு அச்சு எவ்வாறு அமையவேண்டும் என்பதை இந்த ஒப்பந்தங்கள் எடுத்தியம்புகின்றன.
பொருளாதார வங்குரோத்தில் சர்வதேச நாணய நிதியத்தாலும் உலக வங்கியாலும் தத்தெடுக்கப்பட்டுள்ள இலங்கைத் தரகு அரசுக்கு வேறு தெரிவுகள் கிடையாது.
ஆனால், போராடினால் தான் தேசமாக நீடிக்க முடியும், நிரந்தர இன அழிப்பில் இருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்வது அப்போது தான் சாத்தியமாகும் என்ற நிலைப்பாட்டைத் தழுவ வேண்டிய ஈழத்தமிழர் தேசத்துக்கு வேறுவிதமான நியதிகளும் தெரிவுகளும் மட்டுமே எஞ்சியுள்ளன.
* * * இலங்கையின் இறைமையை இந்தியா முழுமையாக மதித்து நடக்கவுள்ளது என்ற உடன்படிக்கைப் புரிதலோடு இலங்கையின் உள்விவகாரம் தொடர்பாக அது என்ன சொல்கிறது என்பதும் இணைத்து நோக்கப்படவேண்டியது.
பன்னிரண்டு உறுப்புரைகளைக் கொண்டுள்ள இந்திய-இலங்கைப் பாதுகாப்பு உடன்படிக்கையின் உள்ளடக்கதில் பொதிந்துள்ள முக்கிய செய்தி பாக்கு நீரிணையின் இருபுறமுமான தமிழர் தேசங்கள் இரண்டையும், அதிலும் குறிப்பாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர் தேசத்தை, மீண்டும் ஆழமாகப் பாதிக்கும் நோக்கைக் கொண்டுள்ளது என்பது விளங்குவதற்குச் சிரமமான புதுச் செய்தியல்ல.
ஈழத்தமிழர்களின் அரசியற் தீர்வு இலங்கை அரசின் 'உள்விவகாரம்' என்பதும், சர்வதேச நீதி போன்ற எதிலும் அயல் நாட்டின் தலையீடு இருக்காது என்பதும் 'உள்நாட்டு விவகாரங்களில் தலையீடு இருக்காது' என்று அந்த உடன்படிக்கையில் எழுதப்பட்டுள்ள வரிகள் சொல்கின்ற செய்தி.
இந்திய-சிங்கள பேரினவாத அரசுகள் ஒட்டுமொத்தமாகத் தமிழ்நாட்டுக்கு முகத்தில் ஓங்கி அறைந்துள்ள செய்தியாகவும் இது பார்க்கப்படவேண்டியது.
தமிழ்நாடு ஒரு மாநிலமாக இருந்தவண்ணம் இந்திய வெளியுறவுக் கொள்கையை ஈழத்தமிழர் சுயநிர்ணய உரிமையின் பாலும், இறைமையின் பாலும் இன அழிப்புக்கான நீதியின் பாலும் ஆற்றுப்படுத்த இயலாத ஆட்சித் தரப்பைக் கொண்டுள்ளது.
அதற்கு மாற்றெனத் தம்மைச் சொல்லிக்கொள்ளும் தரப்புகளும் தவறாகத் திசை திரும்பியுள்ளன.
இந்த இரண்டு தமிழ்நாட்டுத் தரப்பினருமே இந்திய வெளியுறவுக் கொள்கைக்கு எவ்விதத்திலும் எந்தச் சவாலையும் உருவாக்காமல் இந்தியக் கூட்டாட்சியைப் பற்றி மட்டுமே தமது கையைப் பிசைந்து தமிழர் இறைமை அரசியலைத் தாரைவார்த்துள்ளனர்.
இந்தத் தரப்புகள் அனைத்தும் ஈழத்தமிழர் தொடர்பான மூலச் சிக்கலை எள்ளளவும் கையாளும் விருப்போ, அறிவோ அல்லது ஆற்றலோ அற்றவையாக இருந்துவருகின்றன.
இவ்வாறு, தேர்தல் அரசியலிலும் அதிகாரத்தைத் தக்கவைப்பதிலும், கைப்பற்றுவதிலும் தமிழர் அரசியல் சிக்குண்டு போயுள்ளது. இறைமை அரசியல் செயற்பாடற்றுள்ளது.
தமிழ் மக்களுக்கான, தமிழர் தேசங்களுக்கான பரந்துபட்ட மக்கள் இயக்கம் ஒன்றைக் கட்ட இயலாத தமிழ்நாடு தமிழ் நாடே அல்ல.
இந்த அரசியல் இடைவெளியில் தான் சிங்கள தேரவாத பௌத்த பேரினவாதம் தன்னை ஒரு தேசியமாகவும் அதற்கும் அப்பாலான நாகரிகமாகவும் பாவனை செய்து ஏகாதிபத்தியங்களின் புவிசார் அரசியலைக் கையிலெடுத்துத் தொடர்ந்தும் தனது போக்கை நிலைநிறுத்திக்கொண்டிருக்கின்றது.
குழுவாதத்துக்குள்ளும் தமிழ்நாட்டு சமூக வலைத்தள மாயைகளுக்குள்ளும் தாயகத் தேர்தல் அரசியலுக்குள்ளும் ஏகாதிபத்திய சார்புநிலைகளுக்கும் சிக்கிக்கொண்டுள்ள புலம்பெயர் ஈழத்தமிழர்களின் பல வேறுபட்ட குழுக்களும் இந்த நிலைமையை ஆழமாகக் குறிப்பெடுத்துக்கொள்ளவேண்டும்.
தேர்தல் அரசியல் ஊடாக மட்டுமே ஈழத்தமிழ்த் தேசியத்தைக் கட்டிப் பாதுகாப்போம் என்று சிங்களத் தேர்தல் அரசியலுக்குள் தமது மக்களைத் தொலைத்துக் கொண்டிருக்கும் அனைத்து ஈழத்தமிழ் அரசியல்வாதிகளுக்கும் உறைக்கவேண்டிய செய்தியும் இதுவே.
* * * கசிந்துள்ள இந்திய-இலங்கை பாதுகாப்பு புரிந்துணர்வு உடன்படிக்கையானது இரண்டு அரசுகளையும் 'வரலாற்று நாடுகள்' என்று தனது அறிமுகத்தில் குறிப்பிடுகிறது.
உண்மையில் இவையிரண்டும் வரலாற்று நாடுகளோ வரலாற்று அரசுகளோ அல்ல என்பது வரலாற்றியல், நாகரிக, பண்பாட்டியல் பார்வை கொண்டோருக்குப் புரியும்.
ஆரம்பத்திலேயே மேலை நாடுகளின் ஏகாதிபத்தியத் தேவைக்காக ஒற்றையாட்சியாக உருவாக்கப்பட்டதே இலங்கை எனும் அரசு.
1948 டிசம்பர் 15 ஆம் நாளன்று இலங்கையின் ஐ.நா. உறுப்புரிமைக்கு எதிராக பாதுகாப்புச் சபையில் தனது வீட்டோ அதிகாரத்தை ரசியா பயன்படுத்தியது என்பது இத்தருணத்தில் நினைவுபடுத்தப்படவேண்டியது.
தடைப்பட்டிருந்த ஐ.நா. உறுப்புரிமையை 1955 ஆம் ஆண்டில் அமெரிக்கா ரசியாவுடன் பேரம்பேசிப் பெற்றுக்கொடுத்திருந்த பின்னரே இலங்கை நவீன உலக ஒழுங்கில் ஒரு நாடாகியது.
ரசியா வீட்டோவைப் பயன்படுத்தியதற்கான காரணம் இலங்கைத் தீவை பிரித்தானியா தனது இராணுவ நலனுக்காகத் தயார்ப்படுத்தியிருந்தமையாகும்.
சீனா, அமெரிக்கா, இந்தியா என்ற வல்லாதிக்கப் போட்டிக்குள் சிங்கள தேசத்தின் வெளியுறவுக்கொள்கை கையாளப்படவேண்டும் என்பதை சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சிறிமாவோ பண்டாரநாயகாவின் காலத்தில் என். கியூ. டயஸ் என்பவர் தீர்மானித்திருந்தார். இதையே ராஜபக்சாக்களும் சரி, 'மக்கள் விடுதலை முன்னணி' எனப்படும் இடதுசாரி ஜே.வி.பியும் சரி பிரதியெடுத்துப் பின்பற்றி வருகிறார்கள்.
இதற்கு முன்னரே ஐக்கிய தேசியக் கட்சி டி. எஸ் சேனநாயகாவின் காலத்தில் இருந்தே சியோனிஸ்டுகளின் இன அழிப்புப் பாணியைப் பிரதியெடுக்க ஆரம்பித்திருந்தது. இது வலது சாரி ஓட்டத்தின் போக்கு.
தமிழீழம் அமைப்பதற்குத் தான் ஒரு போதும் உடன்படப் போவதில்லை என்பது மறைந்த இந்திரா காந்தியின் நிலைப்பாடாக இருந்தது. இன அழிப்பு என்ற கருத்துநிலையைக் கூட அவர் இந்தியாவின் அதிகாரபூர்வ நிலைப்பாடாக அறிவிக்கத் தயங்கியவராக இருந்தார்.
தமிழீழப் போராட்ட அமைப்புகளுக்கு ஆயுதப்பயிற்சி வழங்கியது இலங்கை அரசைத் தனது வழிக்குக் கொண்டுவருவதற்கான இருதுருவ உலக அரசியற் சூழலில் அவருக்குத் தேவையானதொரு தெரிவாக இருந்தது. தமது உளவு அமைப்புகள் மூலம் ஈழத்தமிழ் அமைப்புகளைப் பிரித்தாண்டு முடக்கிவிடலாம் என்பதில் இந்திய ஏகாதிபத்தியம் ஆரம்பத்தில் அதீத நம்பிக்கை கொண்டு இயங்கியிருந்தது. பின்னர் அதன் நம்பிக்கை தவிடு பொடியாகியது. 2009 முள்ளிவாய்க்கால் இன அழிப்புப் போரின் முடிவின் பின்னர் தான் இழந்திருந்த அந்த நம்பிக்கையை இந்தியத் தரப்பு மீளவும் பெற்றுள்ளது.
ஆக, கடந்து சென்ற நவீன அரசியல் வரலாற்றுக் காலத்திலும் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையைத் தீர்மானித்துவந்த சியோனிஸ்டுகள் தொடக்கம் சோவியத் சார்பு நிலையைக் கைக்கொண்டிருந்த இந்திரா காந்தி முதல் பின்னைய இந்தியத் தலவைர்கள் ஈறாக, ஈழத்தமிழர் இறைமை அரசியலுக்கு குந்தகமான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தனர் என்பது ஆதாரபூர்வமான வரலாற்று உண்மை.
இந்தவகையில், இப்போது எழுதப்பட்டிருக்கும் இந்திய இலங்கை பாதுகாப்பு உடன்படிக்கையானது, பிரித்தானியா உருவாக்கி, அமெரிக்கா தத்தெடுத்த இலங்கை எனும் ஒருமை அரசின் இறைமைப் பாதுகாப்பின் இன்னொரு படிநிலை.
தற்போதைய பல்துருவ உலக அரசியற் சூழல் வேறுவிதமான சூழ்நிலையை உருவாக்கியிருப்பினும் ஈழத்தமிழர் செயற்பாடற்று இருக்கும் வரை எதுவிதத்திலும் பயனளிக்காது.
இலங்கைத் தீவைப் பொறுத்தவரை இந்து சமுத்திரத்தில் தற்போது தொழிற்படும் புவிசார் அரசியலானது நிலத்தால் சூழப்பட்ட வட இந்தியாவில் சீனாவினாலும் ரசியாவினாலும் ஏற்பட்டுள்ள கெடுபிடியால் தீர்மானிக்கப்படுவதைப் போன்றது அல்ல.
இங்கு நடைமுறையில் இருப்பது சிறிய கடலோர அரசுகளுக்கான (littoral small-state) இந்தோ-பசுபிக் வியூகம் சார்ந்த புவிசார் அரசியல். ஈழத்தமிழர் தரப்பில் செயற்பாடின்மை தொடரும் வரை சிங்கள பேரினவாதத்துக்கு சாதகமானதாகவே இந்தப் புவிசார் அரசியலின் தன்மைகளும் தொடரும்.
தமக்கான இறைமைப் போராட்டம் அற்ற, தேர்தல் அரசியலை மட்டும் தற்போது நம்பியிருக்கும் ஈழத்தமிழர் இனியாதல் போராடாவிட்டால் மேற்குறித்த நியதிக்கு உட்பட்டு இன அழிப்புக்கு நிரந்தரமாக இரையாவதைத் தவிர வேறு வழி இருக்காது.
சமகால வரலாற்றையும் புவிசார் அரசியலையும் கூட்டு உரிமை தொடர்பான கொள்கை நிலைப்பாடுகளையும் நுட்பமாகவும் ஆழமாகவும் புரிந்து கொண்டு தமிழர் தேசங்கள் இரண்டும் தத்தமக்கேயுரிய வகையில் தமது இறைமையை நிலைநாட்டுவதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்தால் மட்டுமே விடுதலை பெறும் வாய்ப்புக் கிட்டும்.
ஏகாதிபத்திய எதிர்ப்பு ஊடாகவே ஈழத்தமிழர் விடுதலை சாத்தியமாகும் என்பதை 2025 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தற்காலம் மீண்டும் நினைவுறுத்துகிறது.
Related Articles:04.02.24
சியோனிசம..