2ND LEAD

கறுப்பு ஜூலை கற்றுத்தரும் கடும் எச்சரிக்கை!

[TamilNet, Wednesday, 23 July 2025, 15:17 GMT]
1983 வெலிக்கடைச் சிறைப் படுகொலையும், 1995-96 செம்மணி மனிதப் புதைகுழி உள்ளிட்டு தமிழர் தாயகத்தில் பல இடங்களில் வெளிப்படும் மனிதப் புதைகுழிகளும், 2009 முள்ளிவாய்க்கால் வரையான போரில் இடம்பெற்ற பெருந்திரள் அட்டூழியங்களும் (mass atrocities) இன்ன பிற சர்வதேசச் சட்ட மீறல்களும் இன அழிப்பு (genocide) என்ற முதன்மையான சர்வதேசப் பெருங்குற்றத்துக்குரிய முகாந்திரம் (plausibility) கொண்டவை என்ற நோக்குநிலையில் (orientation) அணுகப்பட்டு சுயாதீன, சர்வதேச விசாரணைக்கு உட்படுத்தப்படவேண்டியவை. இந்த நோக்குநிலையில் ஈழத்தமிழர் தேசத்தினர் தமது அறிவையும் உணர்வையும் ஆற்றுப்படுத்தவேண்டும். இந்த நோக்குநிலையை வெளிப்படையாக மறுதலிப்போருக்கும் அதிலிருந்து நுட்பமாகச் சமூகத்தை வழுவச் செய்வோருக்கும் இடையே எத்தகைய வேறுபாடும் இல்லை.

சுயாதீனமான சர்வதேச விசாரணை என்பது இன அழிப்பு நோக்கம் குற்றச்செயல்கள் பற்றிய உண்மையைக் கண்டறியும் பணிக்குழு (Fact-Finding Mission), அப்பணிக்கும் உயர்வான விசாரணை ஆணையம் (Commission of Inquiry, CoI), அதையும் விடப் பரவலான பணிப்பாணையைக் (mandate) கொண்டிருக்கக் கூடிய விசாரணைப் பொறிமுறை (Investigative Mechanism), இவற்றின் பெறுபேறாக ஏற்படவேண்டிய அரச பொறுப்பையும் (State Responsibility) தனிநபர் குற்றவியல் பொறுப்பையும் (Invididual Criminal Responsibility) சர்வதேச நீதி மன்றிலும் (International Court of Justice, ICJ) சிறப்புக் குற்றவியல் தீர்ப்பாயத்திலும் (International Criminal Tribunal on Sri Lanka, ICT) மேற்கொள்ளவேண்டிய சர்வதேசச் சட்ட நடவடிக்கைகளைக் கோருவதாக அமையவேண்டும்.

பாதிக்கப்பட்ட தரப்பான ஈழத் தமிழர் தமது தலையாய முறைப்பாடான (gravamen) இன அழிப்பை வேறு குற்றங்களுக்கு இணையாக, அவை பெருந்திரள் அட்டூழியப் படிமுறையிற் கீழ்ப்பட்ட சர்வதேசக் குற்றங்களான மானுடத்துக்கெதிரான குற்றங்கள் (Crimes against Humanity) அல்லது போர்க்குற்றங்கள் (War Crimes) ஆயினும், அவற்றோடு சமப்படுத்தி அணுகுதல் ஆகாது.

தமிழர் தரப்புக் கோரிக்கை அமையவேண்டிய நோக்குநிலை பின்வருமாறு அமையவேண்டும்:

  1. இன அழிப்புத் தொடர்பான அரச பொறுப்பு உலக நீதிமன்றம் என்று அறியப்பட்ட சர்வதேச நீதிமன்றில், 1948 இன அழிப்பைத் தடுப்பதற்கும் தண்டிப்பதற்குமான ஐ.நா. சாசனத்தின் அடிப்படையில், அச் சாசனம் இலங்கை உள்ளிட்டு காலம், பொருள், இட நியாயாதிக்கத்துக்கு வந்த 1951 ஜனவரி 12 ஆம் நாளில் இருந்து—அன்றேல் குறிப்பாக தந்தை செல்வா இலங்கை அரசு இன அழிப்பு அரச கொள்கையோடு செயற்படுகிறது என்று தீர்மானம் இயற்றிய 1956 ஆம் ஆண்டில் இருந்தாவது— முகாந்திர அடிப்படையில் சர்வதேச விசாரணைக்கு உட்படுத்தப்படவேண்டும் (State Responsibilty, Genocide Convention, ICJ).

  2. மேற்குறித்த வகையில் முதன்மையாக இன அழிப்பு நோக்கமும் (Intent, dolus specialis and mens rea) குற்றச்செயல்களும் (acts of genocide, actus reus) ஆராயத்தக்க வகையில் பணிப்பாணை வழங்கப்பட்டு, அத்தோடு இதர சர்வதேசக் குற்றச் செயல்கள் தொடர்பான தனிநபர் குற்றவியற் பொறுப்புக்கூறல் இலங்கை தொடர்பாக சிறப்புச் சர்வதேசக் குற்றவியல் தீர்ப்பாயத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்படவேண்டும் (International Criminal Tribunal on Sri Lanka)

  3. மேற்படி அரச பொறுப்பும் தனிநபர் குற்றவியற் பொறுப்பும் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதற்குத் தேவையான குற்றவியற் சான்றுகள் உள்ளிட்ட அனைத்துச் சான்றுகளையும் முறையாகத் திரட்டிப் பாதுகாக்க முழுமையான சுயாதீன பக்கசார்பற்ற சர்வதேச விசாரணைப் பொறிமுறை உருவாக்கப்படவேண்டும் (International, Impartial and Independent Mechanism, IIIM)


துணிவிருந்தால் பின்வரும் கோரிக்கையையும் நான்காவதாகச் சேர்த்துக்கொள்ளமுடியும்:

    இன அழிப்பு கட்டமைக்கப்பட்டதாகத் தொடர்வதால், மீண்டும் நிலைமை சீரழிந்துசென்று இனப்படுகொலை எதிர்காலத்தில் மீள நிகழும் ஆபத்துள்ளது. ஆதலால், கட்டமைக்கப்பட்ட இன அழிப்பைத் தடுத்து நிறுத்தவல்ல அரச கட்டமைப்பு மாற்றங்களை ஏற்படுத்துவதும் மேற்குறித்த சர்வதேச விசாரணைகளை முன்னெடுப்பதும் சமாந்தரமாக, ஒன்றில் ஒன்று தங்கியிராமல் அதேவேளை ஒன்றுக்காக மற்றொன்றை விட்டுக்கொடாமல், மாற்றியமைப்பது இலங்கை என்ற முறையற்ற ஒற்றையாட்சியை உருவாக்கி, அதன் கடந்தகால இன அழிப்புக்கு உடந்தையாகி, அதைத் தொடர்ந்தும் தக்கவைக்கும் அனைத்து சர்வதேச தரப்புகளுக்கும் உள்ள பொறுப்புக்கூறல் ஆகிறது.


படிமுறைப்படி மேற்குறித்த இரண்டாவது முக்கிய கோரிக்கையான இலங்கை தொடர்பான சர்வதேசக் குற்றவியற் தீர்ப்பாயம் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றாக (ICC) முன்வைக்கப்படுவது பொருத்தமற்றது.

ஏனெனில், இலங்கைத் தீவில் நடைபெற்ற இன அழிப்புக் குற்றச் செயல்களில் முக்கியமான வெலிக்கடைப் படுகொலை, செம்மணி போன்ற மனிதப் புதைகுழிகள் 2002 ஜூலை 1 இற்கு முன் நிகழ்ந்த குற்றங்களாதலால் ஒரு போதும், எச்சந்தர்ப்பத்திலும், ஐ.நா.பாதுகாப்புச்சபை (UN Security Council) உத்தரவிட்டாலும் (அப்படி ஒருபோதும் உத்தரவிட்டதில்லை) சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றால் விசாரணைக்கு உட்படுத்தப்படா (The ICC cannot retroactively apply its jurisdiction to situations that occurred before July 1, 2002, when the Rome Statute came into effect).

பாதுகாப்புச் சபையூடாகச் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றுக்குச் (ICC) செல்லும் அதே வழியில் (route) சர்வதேசக் குற்றவியல் தீர்ப்பாயம் (ICT) அமைக்கப்படவேண்டும் என்று கோரிக்கை செம்மையாக அமையவேண்டும். இதற்கான தத்துவார்த்தச் சாத்தியம் உள்ளது.

இது குறித்து தமிழ் அரசியல் கட்சிகள் சிவில் சமூக அமைப்புகளிடையே புரிதல் இன்மை காணப்படுகிறது.

அண்மைய நேர்காணல் ஒன்றில் சட்டத்தரணியும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இப்புரிதலைக் கூட இன்னும் பெறாதவராக அம்பலப்பட்டுள்ளார்.

இனி, மேற்குறித்த தெளிவான நோக்குநிலையில் கடந்தகாலச் சிதைவு எவ்வாறு ஏற்பட்டது என்பதற்கும், அந்த நிலை திருத்தியமைக்கப்பட்டு சர்வதேசச் சூழலில் தகவமைப்பு மாற்றத்துக்கு எவ்வாறு உள்ளாக்கப்படலாம் என்பதையும் விளக்கமாகப் பார்ப்போம்.

* * *


இதுவரை ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பான பெருங்குற்றங்களுக்கான முகாந்திரம் மானுடத்துக்கெதிரான குற்றங்களாகவும் போர்க்குற்றங்களாகவும் மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

அதை நடைமுறையில் மேற்கொள்வதற்கு ஏதுவாக 2015 அலுவலக விசாரணை (OHCHR Investigation on Sri Lanka, OISL) 2021 அலுவலகச் சாட்சியப் பொறிமுறை (OHCHR Sri Lanka Accountability Project, OSLAP) ஆகிய இரண்டும் இதுவரை ஒப்பேற்றப்பட்டுள்ளன.

இந்த நோக்குநிலைத் தவறு அல்லது போதாமை தொடர்பான கேள்வியைப் பலமாக எழுப்பியபோதெல்லாம் கிடைத்த பதில் என்ன தெரியுமா?

“ஐ.நா. மனித உரிமைப் பேரவைக்கு மட்டுப்படுத்தப்பட்ட பணிப்பாணையே இருக்கிறது. ஏனென்றால் இது ஐ.நா. பொதுச்சபையின் ஒரு சேய் அமைப்பாகும். மனித உரிமைகள் பற்றிய பணிப்பாணை மட்டுமே இதற்கு உள்ளது.”

தேர்தல் அரசியல்வாதி கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இந்தத் திரிபுவாதத்தை அண்மையிற் கூட முன்வைத்து வருகிறார்.

இவர் வர்ணிப்பது போல காலஞ்சென்ற சம்பந்தனோ இன்னும் காலாவதியாக மறுக்கும் ஆபிரகாம் சுமந்திரனோ இதற்கு மூலகாரணமோ முக்காற் காரணமோ அல்ல.

அவர்கள் கஜேந்திரகுமாரை விடப் பெரும் தவறு இழைத்தது மறுக்கவியலாத உண்மைதான்.

ஆனால், ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் மட்டுப்படுத்தலை நிலைப்பாட்டு அடிப்படையில் எதிர்கொள்ளும் கடமையில் இந்தத் தேர்தல் அரசியல்வாதிகளின் வீச்சுக்கு அப்பால் ஒட்டுமொத்த சமூகமே தொடை நடுங்கித் தனத்துக்கு ஆளாகியுள்ள சூழலில் கஜேந்திரகுமார் அதற்குள் வீரப் போலியாகத் தென்படுகிறார்.

ஈழத்தமிழர் மீதான இன அழிப்புப் போர் நடைபெற்றபோது ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் உயர் ஆணையாளராக வீற்றிருந்த நவி (நவநீதம்) பிள்ளை அம்மையாரும் இன அழிப்பு என்ற பெருங்குற்றத்தை மையப்படுத்தாத நோக்குநிலைத் திரிபுவாதக் (orientational revisionist) கருத்தை தமிழர்களுக்கு ஊட்டிவந்தார்.

‘தீர்மானங்களில் இருந்தே பேரவையின் செயற்பாடு பிறக்கிறது. இலங்கை தொடர்பான தீர்மானங்களை இயற்றும் நாடுகளே இதற்குப் பொறுப்பு. அவர்களை எதிர்கொள்ளுங்கள்’ என்று நவி பிள்ளை தமிழர்களுக்கு விளக்கத்தை வழங்கி புவிசார் அரசியற் குற்றவாளிகளின் பொறுப்பை மறைமுகமாகச் சுட்டியிருந்தாற் கூட அவரைப் புரிந்துகொண்டிருக்கலாம்.

ஆனால், தமிழராக இருந்தும் ஈழத்தமிழர் இன அழிப்புத் தொடர்பாக கருத்துநிலை இல்லாதவராகவே தான் இருந்துவந்துள்ளார் என்ற தன்னிலை விளக்க, பணித்துறை அரசியலை, தனது பதவிக்காலத்தும், அதன் பின்பும், மேற்கொண்டு வந்துள்ளார்.

‘தமிழர் விடயத்தில் அம்மையார் அப்படிப்பட்டவர் அல்லர்’ என்று கருதுபவர்கள் சான்றுகளின் பாற்பட்டு அறிவுபூர்வமாகத் தமது புரிதலை மீளாய்வு செய்யவேண்டும்.

தவறான வியாக்கியானம் தந்த அம்மையாருக்கு ஒன்றில் ஐ.நா.பற்றிய அறிவு இல்லாதிருந்திருக்கவேண்டும். அல்லது வேண்டுமென்றே அவர் வித்தியாசமான வியாக்கியானத்தைத் தமிழர்களுக்கு முன்வைத்திருக்கவேண்டும்.

முதலாவதற்கு வாய்ப்பே இல்லை. சர்வதேசச் சட்டத்தையும் ஐ.நா. பொறிமுறையையும் நன்கு அறிந்த சட்ட மாமேதை அவர்.

ஆகவே, அவர் ஐ.நா. நோக்குநிலையில் இருந்து அல்ல, தனது நோக்குநிலையில் இருந்து தமிழர்களுக்கு இந்த வியாக்கியானத்தைக் கொடுத்திருக்கிறார். இந்தப் பாரபட்சம் வெள்ளிடை மலையாக பிற்காலத்தில் நிரூபணமாகியுள்ளது.

அது எவ்வாறு?

நவி பிள்ளையைத் தொடர்ந்து ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் உயர் ஆணையராக இருந்த சைட் இளவரசரின் காலத்தில் மியான்மார் தொடர்பான சுயாதீனமான சர்வதேச கண்டறிதற் பணிக்குழு (Independent International Fact-Finding Mission on Myanmar, IIFFMM) என்ற கட்டமைப்புக்கான பணிப்பாணையை ஐ.நா. மனித உரிமைப் பேரவை 2017 மார்ச் மாதத்தில் வழங்கியது.

மியான்மார் நாட்டின் ஒத்துழைப்பு இல்லாமலே, அந்நாட்டின் எதிர்ப்புக்கு மத்தியில் ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் கடுமையான நிகழ்ச்சி நிரல் 4 இற்குள் வைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது (இன்னுமொரு கஜேந்திரகுமாரின் அண்மைய கூற்றும் இதிலே கட்டுடைக்கப்படுகிறது).

விளைவாக, உருவாகியிருந்த சர்வதேச சுயாதீன கண்டறிதற் பணிக்குழு 2018 செப்ரம்பரில் இன அழிப்பு நோக்கோடு பெருங்குற்றங்கள் புரியப்பட்டிருப்பதற்கான கோடிகாட்டல் இருப்பதாகச் சுட்டித் தனது 435 பக்க அறிக்கையைச் சமர்ப்பித்திருந்தது (A/HRC/39/CRP.2).

இதைத் தொடர்ந்து 2018 செப்ரம்பரில் ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் உயர் ஆணையராக விளங்கிய மிசெல் பசுலெ(ற்) அம்மையாரின் கடமைக் காலத்தில் மியான்மாருக்கான சுயாதீன விசாரணைப் பொறிமுறை (Independent Investigative Mechanism for Myanmar, IIMM) உருவாக்கப்பட்டது. அதிலே இன அழிப்பு என்ற பெருங்குற்றத்தையும் உள்ளடக்கிய பணிப்பாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

IIMM மனித உரிமைப் பேரவையில் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால், ஐ. நா. பொதுச்சபையில் 2016 டிசம்பரில் சிரியா தொடர்பாக IIIM தொடங்கப்பட்டிருந்தது.

சிரியா தொடர்பான IIIMM இன் பணிப்பாணை மியான்மார் பற்றிய IIMM இன் பணிப்பாணையை விடத் தெளிவாக எழுதப்பட்டுள்ளது என்பதால் காலஞ்சென்ற அமெரிக்கப் பேராசிரியர் பிரான்சிஸ் பொய்ல் உள்ளிட்டோர் தமிழர் கோரிக்கைக்கான முன்மாதிரிப் பணிப்பாணையாக IIIM இனைக் கொள்ளவேண்டும் என்று குறிப்பிட்டுவந்தனர்.

மியான்மார் தொடர்பில் மனித உரிமைப் பேரவையின் நிகழ்ச்சிநிரல் 4 இற்குள் வைத்து கண்டறிதலுக்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உருவாக்கப்பட்ட மருஸ்கி தருஸ்மான் அவர்களின் தலைமையிலான சுயாதீன சர்வதேச கண்டறிதல் (IIFFMM) தனது அறிக்கையில் இன அழிப்புக் குற்றம் விசாரிக்கப்படவேண்டிய கோடிகாட்டலை வெளியிட்டது. அதைத் தொடர்ந்தே நிகழ்ச்சிநிரல் 2 இற்குள் வைத்து விசாரணைப் பொறிமுறை (IIMM) உருவாக்கப்பட்டு —குறித்த நாட்டின் கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும்— நடவடிக்கை தொடர்கிறது.

இது இவ்வாறிருக்க, அதே மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பாக இன அழிப்புக்கான கோடிகாட்டலை மேற்கொள்ளத்தக்க சுயாதீனத் தன்மையுடன் சர்வதேச கண்டறிதற் பணிக்குழு அமைக்கப்படாமல் தவிர்க்கப்பட்டு, மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அலுவலக விசாரணையாக நவி பிள்ளை அம்மையாரின் காலத்தில் அறிக்கையிடல் ஆரம்பத்தில் இருந்தே நிகழ்ச்சி நிரல் 2 இன் கீழ் சுயாதீனம் அற்றதாக முன்னெடுக்கப்பட்டு OISL அறிக்கை செய்ட் ராட் அல்-குசேன் இளவரசர் ஆணையாளராகக் கடமையாற்றிய 2015 ஆம் ஆண்டு செப்ரம்பரில் வெளியிடப்பட்டது.

இளவரசர் செய்ட்டிடம் இலங்கையின் இன அழிப்புக் குற்றத்தை ஏன் பார்க்கவில்லை என்ற கேள்வி முன்வைக்கப்பட்டபோது, தாராளமாக நேரமெடுத்துச் சிந்தித்து அவர் சொன்ன பதில் நவி பிள்ளை அம்மையாரின் நழுவற் பதிலை விடத் தரமானதாக இருந்தது; சட்ட ஆய்வுக்குப் பலனளிக்கும் பதிலாகவும் இருந்தது.



2021 ஆம் ஆண்டு தமிழ்நெற் நவி பிள்ளை அம்மையாரிடம் நோக்குநிலை மட்டுப்படுத்தல் தொடர்பாக மீண்டும் வினவியபோது தனது பழைய கருத்தையே அவர் திருப்பியும் ஒப்புவித்துக்கொண்டிருந்தார்.

ஈழத்தமிழர் இன அழிப்புத் தொடர்பாக தனக்கு நிலைப்பாடு இல்லையென்றும் சொல்லியிருந்தார்.

உண்மையில், நவி பிள்ளைக்கும் முன்னதாக ஆணையாளராக இருந்த (2004-2008) முன்னாள் கனடிய நீதியரசர் லூயி ஆர்பர் அம்மையார் இலங்கை தொடர்பான மனித உரிமை அலுவலக நோக்கு நிலையை பிள்ளைக்கும் முன்னரே ஏற்படுத்தியிருந்தார். மாறாக, சம்பந்தனோ சுமந்திரனோ மேற்கொண்ட தவறான அரசியலால் ஆர்பரோ, பிள்ளையோ தமது நோக்கு நிலையைச் செதுக்கியிருக்கவில்லை.

'ஈழத்தமிழர்கள் சுயநிர்ணய உரிமைக்கு அருகதை அற்றவர்கள். இன அழிப்பு என்ற குற்றத்தை உச்சரிக்கத் தகுதி அற்றவர்கள். இரண்டு தரப்புகளில் ஒரு தரப்பாக அவர்களும் போர்க்குற்றங்களைப் புரிந்தார்கள்' என்ற தனது நோக்கு நிலையை லூயி அம்மையார் 2010 இல் சர்வதேச சிக்கல்கள் குழுமம் (ICG) என்ற நிறுவனத்தின் இயக்குநராகப் பணிபுரிகையில் அப்பட்டமாகவே உளறியிருந்தார்.



எது எவ்வாறிருப்பினும், இன அழிப்புக்கான கோடிகாட்டலை, அதற்குரிய ஆரம்பக் கண்டறிதலை மேற்கொள்ளும் அதிகாரமும் வாய்ப்பும் மனித உரிமைப் பேரவைக்கு உண்டு. இது தற்போது நிறுவப்பட்டுள்ள மறுக்கமுடியாத உண்மை.

47 நாடுகள் சுழற்சிமுறையில் பங்கேற்கும் மனித உரிமைப் பேரவையில் சாதிக்க இயலாததை 193 நாடுகள் அங்கம் வகிக்கும் தமிழருக்கென்ற ஓர் அரசும் இல்லாத உலக சூழலில் சாதித்துவிடுவதோ, வீட்டோ அதிகாரம் கொண்ட பாதுகாப்புச் சபைக்குரிய விதிகளையும் சிவப்புக் கோடுகளையும் தாண்டிச் சாதிப்பதோ இலகுவானதல்ல.

ஆகவே, சமாந்தரமாக அனைத்து ஐ.நா. அவைகளிலும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்ற நிலைப்பாடு ஈழத் தமிழர் தரப்பிடம் இருக்கவேண்டும்.

ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் ஈழத்தமிழர் அலைக்கழிக்கப்பட்டதே கடந்த கால வரலாறு என்பதைத் தமிழ்நெற் பலமுறை எழுதி வலியுறுத்தி வந்துள்ளது. அதேவேளை, மாறிவரும் உலக ஒழுங்கில் சர்வதேச அரசியலும் சர்வதேச நீதியும் முட்டி மோதிக்கொள்ளும் களமாயுள்ள இப்பேரவையில் கோரிக்கைகளைச் செப்பனிட்டு முன்வைக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டையும் வலியுறுத்திவந்துள்ளது.

அண்மையில் பலஸ்தீனம் தொடர்பான ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர் (United Nations Special Rapporteur on the occupied Palestinian territories) பிரான்செஸ்கா அல்பானீஸ் அம்மையார் மெச்சத்தக்க துணிகரத்தோடு செயற்பட்டுள்ளமை ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் ஊடான பணிப்பாணையில் இருந்தே பிறந்த செயற்பாடு.

ஆக, ஈழத்தமிழர் கோரிக்கை மனித உரிமைப் பேரவையில் இருந்து பொறுப்புக்கூறலை அகற்றிவிடு என்பதாக முன்வைக்கப்படக் கூடாது. பொறுப்புக்கூறல் அனைத்து மட்டங்களிலும் சமாந்தரமாக முன்னெடுக்கப்படவேண்டும்.

தமிழ் இன அழிப்புத் தொடர்பாக இன்னும் மேற்கொள்ளப்படாத ஆயத்த, முகாந்திர நடவடிக்கைகள் எதுவும் இடம்பெறாமல் உள்ள சூழலில் குறைமுதிர்ச்சியாக வேறு இரு குற்றவகைகளுக்குள் மட்டுப்படுத்தும் பணிப்பாணைகளுக்குட்பட்டு சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டால் அதன் பலனற்ற விளைவுகளையும் ஈழத்தமிழர்களே சுமக்கவேண்டி வரும். அந்தச் சுமை மீண்டும் ஓர் ஆயுதப்போராட்டத்தையும் எம்மீது நிர்ப்பந்திக்கலாம்.

ஆகவே, கடந்தகாலப் பொறுப்புக்கூறல் தொடர்பான ஆய்வுகளில், பணிப்பாணைகளில் இன அழிப்புக் குற்றம் தொடர்பான பெருத்த குறைபாடு இருப்பதால் குறித்த போதாமைகளை நீக்கி அடுத்தகட்ட கண்டறிதல்களும் (Fact-Finding Mission) சுயாதீன சர்வதேச விசாரணைப் பொறிமுறைகளும் (Commission of Inqiry and IIIM) கொண்டுவரப்படவேண்டும். அதற்கான அதிகாரமும் வாய்ப்பும் மனித உரிமைப் பேரவைக்குத் தாராளமாகவே உள்ளது. மேற்குறிப்பிட்ட முன்னுதாரணங்களும் இதை எடுத்துக்காட்டுகின்றன.

அலுவலகப் பொறிமுறைக்கு அப்பாலான சுயாதீன சர்வதேசத் தன்மையுடன் குறிப்பாகக் கோரவேண்டியவற்றை, தெளிவாகச் சுட்டிக்காட்டிக் கோரிக்கைககள் வடிவமைக்கப்படவேண்டும்.

நவி பிள்ளை அம்மையாரே இதற்குத் தற்போது எடுத்துக்காட்டாகியுள்ளார் என்பது கூட நன்மை பயக்கும் ஒருவகை விந்தையிலும் விந்தை.

'பிள்ளை ஆணையம்' என்று குறிப்பிடப்படுகின்ற கிழக்கு ஜெருசலேம் உள்ளடங்கலான ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பலஸ்தீனப் பிரதேசத்தின் மீதும் இஸ்ரேலின் மீதுமான சுயாதீன சர்வதேச விசாரணை ஆணைக்குழு (Independent International Commission of Inquiry on the Occupied Palestinian Territory, including East Jerusalem, and Israel) 2021 மே மாதம் 21 ஆம் நாள் ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு (A/HRC/RES/S-30/1) அமைவாக அமைக்கப்பெற்றது.

இதன் தலைவியாக பிள்ளை அம்மையார் தனது 83 ஆம் வயதிலும் பாரிய தாக்கமுள்ள செயற்பாட்டை, அதுவும் இஸ்ரேல் என்ற உலக ஏகாதிபத்தியங்களை ஆட்டிப்படைக்கும் சியோனிச அரசின் இன அழிப்பை, விசாரணைக்கு உள்ளாக்கியுள்ளார்.

அதுமட்டுமல்ல, தனது துணிகரச் செயற்பாட்டால் சியோனிச இஸ்ரேலின் கோபத்துக்கு ஆளாகி தனது தள்ளாத வயதைக் காரணம் காட்டி குறித்த பதவியில் இருந்து இராஜினாமா செய்யும் நிலைக்கு அண்மைய நாட்களில் அவர் சென்றுள்ளார்.

இவற்றில் இருந்து எதையும் சர்வதேசச் சட்ட ரீதியாகக் கற்றுக் கொள்ளாது கஜேந்திரகுமார் போன்ற அரசியல்வாதி ஒரு புறமும், மறு புறம் தமிழ் சிவில் சமூக அமையம் என்று கனதியாக கடந்த காலத்தில் உருவாக்கப்பட்டிருந்தாலும் காலப்போக்கில் வெற்றுத்தாள் அறிக்கையிடும் அமைப்பாகவும் வெளிச்சக்திகளின் தன்னார்வ நிதியூட்டங்களிற் தங்கியிருப்போரால் நிர்வகிக்கப்படும் குழுவாகவும் மாறிவிட்ட தரப்புகளால் ஈழத்தமிழர் தேசிய நிலைப்பாடு என்ற போர்வையில் குறி தவறும் கொள்கை வகுப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பதற்கான அறிகுறிகள் அப்பட்டமாகவே தென்படுகின்றன.

2021 இல் கஜேந்திரகுமாரும், சிவில் சமூக பிரதிநிதிகளும் சேர்ந்து முன்வைத்து, சம்பந்தனும் அதில் கையெழுத்திட்டிருந்த கோரிக்கைகள் கூட சறுகும் நோக்குநிலையிலேயே தயாரிக்கப் பட்டிருந்தன.

* * *


இஸ்ரேலைப் போல ஆக்கிரமிப்பு அரசே குற்றத்தரப்பாகவுள்ள சூழலில் இலங்கை அரசின் இறைமை (State Responsibility) ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை செல்லாக்காசாகக் (null and void) கருதப்படவும் கையாளப்படவும் வேண்டியது.

சியோனிச இஸ்ரேலைப் போல அமெரிக்காவினதும் மேற்கு நாடுகள் பலவற்றினதும், ஏன் இந்தியாவினதும், வெளியுறவுக்கொள்கையில் தாக்கம் செலுத்தித் திசை திருப்பும் வலிமை கொண்ட ஓர் அரசு அல்ல இலங்கை அரசு. தானே தாங்கிக் கொள்ளும் பொருளாதாரத் திராணியைக் கூடத் தொலைத்துவிட்ட ஓர் அரசுதான் இலங்கை அரசு.

இப்படியான இலங்கையின் முறையற்ற அரச இறைமையை அனுசரிக்கும் உள்ளக விசாரணையோ (internal/national investigation), மட்டுப்படுத்தப்பட்ட கலப்புப் பொறிமுறையோ (hybrid mechanism) அல்லது அதற்கும் அப்பால் வேறு நாடுகளில் —தத்தம் உள்நாட்டளவில் உலகளாவிய நியாயாதிக்கம் (Universal Jurisdiction) என்ற அடிப்படையில்— முன்னெடுக்கப்படும் குறியீட்டுச் சட்ட நடவடிக்கைகளோ இன அழிப்பு என்ற பெரும் சர்வதேசக் குற்றத்தைச் சர்வதேச விசாரணைக்கு உள்ளாக்குவதற்கு எவ்வகையிலும் ஏதுவான மாற்றீடாகவோ அல்லது அதை நோக்கிய முகாந்திரத்தை நிறுவும் படிநிலைகளாகவோ ஈழத்தமிழர்களால் ஒருபோதும் முதன்மைப்படுத்தக்கூடாதவை.

ஈழத்தமிழர் தேசம் இன அழிப்பைத் தடுப்பதற்கும் தண்டிப்பதற்குமான சர்வதேச சாசனத்தால் (Genocide Convention) பாதுகாக்கப்படவேண்டிய தேசக் குழு (protected national group).

ஆகவே, உயர்வான ஒன்றைச் செய்வது சாத்தியப்படாத 'எட்டாப்பழம்' என்ற தொடைநடுங்கித் தனத்தால் குறைவான இன்னொன்றையும் கலந்து வேண்டுவது அரசியற் செயல்நயம் அல்ல. அது நீர்த்துப்போகவைக்கும் அரசியல்.

உள்ளக அல்லது கலப்புப் பொறிமுறைகளை அங்கீகரிக்கும் தொனியில் கோரிக்கைகளைக் கலந்து முன்வைப்பதும் அதியுச்சக் குற்றத்தை மையப்படுத்தும் நோக்குநிலையில் இருந்து விலகிச் சமாளிப்புத் தனமாகக் கோரிக்கைகளை வடிவமைப்பதும் இன அழிப்பைத் தடுப்பதற்கும் தண்டிப்பதற்கும் அது மீளநிகழாமையை உறுதிப்படுத்துவதற்கும் வழிகோல் ஆகாது; வழிவரைபடமும் ஆகாது.

மாறாக, சர்வதேச ஏகாதிபத்திய சக்திகளின் நோக்கங்களுக்கு ஈழத்தமிழர் தேசத்தைப் பலியிடவும் மண்டியிடவும் மட்டுமே அது பயன்படும்.

அப்படியான செயல்களில் ஈடுபடுவோர் ஏகாதிபத்திய அடிவருடிகளாக மாத்திரமே வகைப்படுத்தப்படும் இலாயக்குக் கொண்டவர்கள்.

தொடரும் பண்பாட்டு இன அழிப்பும் (cultural genocide) கட்டமைப்பு இன அழிப்பும் (structural genocide) இற்றைவரை சர்வதேசச் சட்டங்களால் விசாரணைக்குரிய குற்றங்களாகத் தெளிவாகக் கையாளப்படாவிடினும் இவையும் மிக முக்கியமானவை. போர் முடிந்து 16 ஆண்டுகளின் பின்னரும் இவை தொடரும் நிலையானது போருக்கு முன்னோடியாக இவை இருந்தமைக்கு ஒப்பானது. இவற்றை நீட்சியான இன அழிப்பு நீடிக்கும் தடயங்கள் என்றவகையில் புதிய வழிகளை சர்வதேசச் சட்டத்துக்கு முன்னுதாரணமாக்கும் வகையில் (precedent-setting) புரிந்து கையாளவேண்டும்.

தற்போது நடைமுறையில் சட்ட நியாயாதிக்கம் இல்லாதுவிடினும் இவற்றைக் கூடுதல் அம்சங்களாகக் (extra features) கையாளத் தவறக் கூடாது. இவற்றை இனிவருங்காலத்தில் உலகுக்கு நன்மை பயக்கும் விதத்தில் சர்வதேச வழமைச் சட்டத்தில் முன்னுதாரணமாக்க எம்மாலும் இயலும் என்று சிந்தித்துச் செயற்படவேண்டும்.

அதேவேளை, கூடுதல் அம்சத்தை மட்டும் மையப்படுத்தி இன அழிப்புக்கான சர்வதேச நீதிக்கான முகாந்திரத்தை (plausibility) ஏற்படுத்திவிட இயலாது என்பதையும் புரிந்து செயற்படவேண்டும்.

இன அழிப்பைத் தடுப்பதற்கும் தண்டிப்பதற்குமான சர்வதேசச் சட்ட நோக்குநிலையை தமிழர்களுக்கு உள்ளிருந்து வெளிப்படையாகவோ நுட்பமாகவோ நீர்த்துப் போகவும் மடைமாற்றவும் முற்படும் தேர்தல் அரசியல்வாதிகளும், சட்டவியலாளர்களும், குடிசார் சமூகம், கருத்துருவாக்கிகள், பேரவைகள் என்ற போர்வைகளில் தன்னார்வ வெளிச்சக்திகளின் நிகழ்ச்சிநிரலுக்குப் பலிபோவோரும் அவர்கள் வெளிப்படையான தமிழ்த் தேசிய எதிர்ப்பாளர்களாயினும் சரி, புலி எதிர்ப்பு அணியினராயினும் சரி, 'முறிந்த பனைமரக் குழுமத்தின் தற்கால மறைமுக வளர்ப்புகள்' ஆயினும் சரி, அவர் எத்திறமைத்தவராயினும் மிகக் கடுமையான ஆய்வுக்கும் அம்பலப்படுத்தலுக்கும் ஆளாக்கப்படவேண்டியவர்கள் ஆவர்.

தேசிய விடுதலையும் சர்வதேச நீதியும் நோக்கிய தடவழித்திருத்தத்துக்கு ஆளாகத் தயாரற்றோர், சமூகத்தைப் படிப்படியாக மடைமாற்றம் செய்யவிழையும் நோக்குநிலையில் இயங்குவோராக இருக்கும் கெடுதியை விளைவிப்போர் ஆவர்.

இன அழிப்புக்குள்ளாகியுள்ள ஒரு தேசத்தின் பொது நலனுக்காகக் காய்தல் உவத்தலின்றி ஆதாரபூர்வமாக மேற்குறித்த நோக்குநிலைக்காக மேற்கொள்ளப்படும் அம்பலப்படுத்தல்களைத் துணிந்து மேற்கொள்வதில் அச்சமோ தயக்கமோ வேண்டியதில்லை.

கடந்தகால நண்பர்களாயினும் உறவினராயினும் எந்தவிதத் தயவும் காட்டவேண்டியதில்லை.

அதேவேளை, தனிநபர் தாக்குதல்களிலும் ஈடுபடவேண்டியதில்லை. சான்றுகளின் அடிப்படையிலும், நோக்குநிலை அடிப்படையிலும் அனைவரும் அணுகப்படவேண்டியது காலத்தின் தேவை.

‘நெற்றிக்கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே’, ‘நாமார்க்கும் குடியல்லேம் நமனை அஞ்சோம்’ என்ற அற மரபின் வழிநின்று இன அழிப்பு என்ற பெருங்குற்றத்தை மட்டும் மையப்படுத்திச் சிந்திக்கும் செயலாற்றும் தேசமாகவும் மக்களாகவும் ஈழத்தமிழர் தம்மைத் தகவமைத்துக் கொள்ளவேண்டும்.

ஏகாதிபத்தியங்கள் எழுவதும் விழுவதும் நியதி!

ஈழத்தமிழர் மீதான இன அழிப்பு என்ற சிங்கக் கூர்வாளைத் தீட்டி விளையாடாத வல்லாதிக்கங்கள் ஏதும் உண்டா என்று கேட்கும் அளவுக்கு கடந்த காலம் ஈழத்தமிழர்களுக்குப் பாடங்களைக் கற்பித்துள்ளது.

இந்த ஏகாதிபத்தியங்களின் தேவைக்காக நீட்சியான இன அழிப்புக்கு உள்ளாக்கப்பட்ட ஒரு மக்கள் —இனப்படுகொலைக் குற்றச் செயல்கள் மீள நிகழாமையை உறுதிசெய்யும் சர்வதேசக் காப்புறுதி எதுவுமற்ற சூழலில்— ஏகாதிபத்தியங்களின் தாராண்மைவாத அல்லது அதிகாரவாண்மைவாத தேவைகளுக்கு 'அடித்துக்கொடுப்பதற்கு' புவிசார் அரசியலைப் பயன்படுத்துகிறோம் என்று 'நாமம்' சூட்டிக்கொள்ளவேண்டியதில்லை.

நிலைப்பாடுகளும் கோரிக்கைகளும் அறத்தின் பாற்பட்டவை. வெளிச்சக்திகளின் அரசியலின் பாற்பட்டவையாகவோ, புவிசார் அரசியலைக் கருத்திற்கொண்டோ வடிவமைக்கப்படுபவை அல்ல. அவ்வாறு செயற்படுவது அரசியற் செயலாட்சி நயமும் (diplomacy) ஆகாது.

காகம் இருக்கப் பனம் பழம் விழுந்தது போல வேண்டுமானால் புவிசார் அரசியல் காகமாக இருந்துவிட்டுப் போகட்டும்.

ஆனால், 'காகங்களுக்காகக்' காத்திருந்து அப்படியே அழுகிப் போகும் வரை ஏங்குவதாகப் 'பனம்பழம்' தன்னைத் தகவமைத்துக் கொள்ளவேண்டியதில்லை.

ஈழத்தமிழர் மத்தியில் 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் எதிரிகளையும் இரண்டகர்களையும் விட தொடை நடுங்கிகளே ஆபத்தானவர்கள்!

மக்களைத் தொடை நடுங்கிகளாக மாற்றும் ஏகாதிபத்திய அடிவருடிகளையும் நுட்பமாக மடைமாற்றம் செய்யும் 'முறிந்த பனைமர' வளர்ப்புகளையும் ஆதாரபூர்வமாக எதிர்கொள்வது தற்போது தேவைப்படும் தலையாய ஈழத்தமிழர் கருத்துநிலைப் பணியாகின்றது.

ஆக, ஈழத்தமிழர் நோக்குநிலை சர்வதேசச் சட்டத்தின் பாற்பாட்டு, இலங்கை அரச இறைமையைப் புறக்கணித்து, இன அழிப்புக்கான சர்வதேச நீதியை முதன்மைப்படுத்தி, ஏனைய உலக மக்களுக்கும் வழிகாட்டியாக அமையும் வண்ணம் நிலைப்பாடுகள் செப்பனிடப்படவேண்டியது கறுப்பு ஜூலைக் காலம் கற்றுத் தரும் கடும் எச்சரிக்கை ஆகட்டும்!


Related Articles:
21.03.21   Navi Pillay explains ‘human rights’ limitations in Geneva on..
26.02.21   Tamils witness false dilemma in Geneva as geopolitical forma..
01.04.19   Sumanthiran's rationality exposes Wigneswaran's gullibility
22.03.19   UNHRC ‘Sri Lanka’ roadmap premeditated not to deliver genoci..
25.09.13   Pillay ‘balances’ crimes of genocide with crimes of bad gove..
09.09.13   Navi Pillay, a big disappointment: Prof Ramasamy
30.03.12   Post-UNHRC needs show of Fourth World solidarity
20.12.11   Building consensus with universal ideology

 

Latest 15 Reports
23.07.25 15:17  
கறுப்பு ஜூலை கற்றுத்தரும் கடும் எச்சரிக்கை!
18.05.25 01:31  
அமெரிக்க வியூகத்துள் இந்திய-இலங்கை பாதுகாப்பு உடன்படிக்கை
21.09.24 16:12   Photo
JVP always denied Eezham Tamils’ inalienable self-determination: Anthropology scholar
18.09.24 21:30   Photo
Sinhala leftists need careful perusal of Lenin’s definition of Right to Self-Determination
30.08.24 15:27   Photo
Viraj exposed West’s criminalization of Tamil struggle
30.08.24 09:08  
‘பொதுச்சபை’ நகர்வை ‘சிவில் சமூக அமையம்’ தரும் படிப்பினைகளின் கண்கொண்டு நோக்குதல்
20.08.24 17:59   Photo
Viraj teaches Zone of Peace, Peace Process, Crimes Against Peace
18.08.24 21:23   Photo
Viraj Mendis: A beacon of international solidarity and a pillar in the Eelam-Tamil liberation struggle
18.08.24 16:47   Photo
Viraj in Tamil Radical Politics
18.08.24 11:27  
மூலோபாயத்தையும் தந்திரோபாயத்தையும் தொலைத்த தேர்தல் அரசியலைத் திருத்த இயலுமா?
17.08.24 12:15   Photo
விராஜ் மெண்டிஸ் விட்டுச் செல்லும் நிரப்பவியலா இடைவெளி
04.02.24 15:40   Photo
சியோனிசம் காணும் தோல்வி ஈழத்தமிழருக்குப் பலன் தரவல்ல படிமை மாற்றத்தின் அறிகுறி
24.04.22 05:44  
தீவின் நெருக்கடிச் சூழலில் ஈழத்தமிழர் தேசம் கடைப்பிடிக்கவேண்டிய நிலைப்பாடுகள்
09.04.22 14:44   Photo
குறிதவறும் ஈழத்தமிழர் தலைமைகளுக்கு வரலாறு தருகின்ற எச்சரிக்கை
21.01.22 07:24   Photo
ஈழத்தமிழர் தேசத்தின் தலைமைத்துவம் தேர்தல் அரசியற் கட்சிகளுக்கு அப்பாலானது
 
Find this article at:
http://www.tamilnet.com/art.html?catid=13&artid=39997