பொதுவாக்கெடுப்பை, இன அழிப்பு நீதியைக் காற்றில் பறக்கவிட்ட தமிழக முதல்வர்

[TamilNet, Tuesday, 13 January 2026, 11:17 GMT]
தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெற நான்கு மாதங்களே இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. இத்தருணத்தில், சட்டமன்றில் ஏற்கனவே வலுவாக உள்ள தீர்மானங்களான தனி ஈழத்துக்கான பொதுவாக்கெடுப்பு, இன அழிப்புக்கான சர்வதேச விசாரணை என்ற இரண்டு அடித்தளக் கோரிக்கைகளுக்காக இதுவரை தனது ஆட்சிக்காலத்தில் எவ்வகையிலும் உரப்பாக எந்தப் பங்கும் ஆற்றியிராத தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்குத் தற்போது தூது மடல் ஒன்றை வரைந்துள்ளார். அதிலே இலங்கையில் ஏற்படக்கூடிய “ஏக்கிய ராஜ்ஜிய” எனும் படுகுழி அரசியலமைப்பு நகர்வைத் தடுக்க ஆவன செய்யுமாறு கோரியிருந்தார். இது முக்கியமானது என்று முன்னைய தமிழ்நெற் கட்டுரை வரவேற்றிருந்த அதேவேளை அந்த மடலில் பொதிந்துள்ள தவறுகள் அடுத்த கட்டுரையில் முன்வைக்கப்படும் என்பதையும் சுட்டிக்காட்டியிருந்தது.

இந்தியப் பிரதமருக்கு அனுப்பப்பட்ட தூதுமடலில் ஏற்பட்டுள்ள தவறுகள் தொடர்பாக தொல். திருமாவளவனும் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் ஒருவரை ஒருவர் கை காட்டிவிட்டுத் தப்பித்துவிட முயற்சிக்கலாம். அது அவர்களுக்கு இலகுவானது.

ஏற்கனவே, தமிழீழம் என்பதை ‘இறுதி இலக்கு’ என்றும் ‘கனவு’ என்றும் சித்தரித்துவிட்டார் திருமாவளவன்.

இலங்கைத் தீவில் ஈழத்தமிழருக்கான அரசியற் தீர்வுக்கான இடைத் தரிப்பாகக் ‘கூட்டாட்சி தகும்’ என்பது, களையவொண்ணா (inalienable) சுயநிர்ணய உரிமை பற்றி மட்டுமல்ல, அரசியலமைப்பு வழிவரைபடம் தொடர்பான அறிவும் அற்றவர்கள் முன்வைக்கும் பிறழ்வு வாதமாகும்.

இடைத் தரிப்பிலேயே சுயநிர்ணய உரிமையின் பொதுவாக்கெடுப்புக்கான அடித்தளம் அடியோடு அகற்றப்பட்டுவிடுகிறதே?

பிறகென்ன இறுதி இலக்கு? பிறகேது கனவு?

ஸ்பானியாவில் 2017ஆம் ஆண்டு நடைபெற்ற கத்தலோனியா பொதுவாக்கெடுப்புக்கு நேர்ந்த கதியே இந்தச் சிக்கலை நேரடியாக விளக்குகிறது என்பதை தமிழ்நெற் ஏற்கனவே தனது எழுத்துக்களில் தெளிவுபடுத்தியுள்ளது.

சுயநிர்ணய உரிமையை இடைத்தரிப்பிலேயே கொன்றுவிடுகின்ற, முன்னுக்குப்பின் முரணான கூட்டாட்சித் திட்டம் ஒன்றை, இலங்கைத் தரப்புகளிடம் மீண்டும் மீண்டும் கையளித்துவிட்டு, தனது 2024 தேர்தல் விஞ்ஞாபனத்திலும் அதை மீளவும் குறிப்பிட்டுவிட்டு, பேச்சளவில் மட்டும் முழுமையான சுயநிர்ணய உரிமையும் தனித்துவமான இறைமையும் கொண்ட கூட்டாட்சித் தீர்வு என்று பேசியவாறு, ஆறாம் சட்டத்திருத்தப் பூச்சாண்டியைக் காண்பித்து விதண்டாவாதம் புரிவதில் விற்பன்னராகியுள்ளார் கஜேந்திரகுமார்.

அவரும் ‘இடைத் தரிப்பு, இறுதி இலக்கு’ என்ற கட்டுரைப்பை (narrative) ஆங்காங்கு இயம்பிவருகிறார்.

‘ஏக்கிய ராஜ்ஜிய/ஒருமித்த நாடு’ என்ற முதலாம் உறுப்புரையை வரைவிலக்கணப்படுத்தியுள்ள 2019 அரசியலமைப்பு விவாதவரைபின் தயாரிப்பில் மறைந்த இரா சம்பந்தன் தலைமையில் பங்கேற்ற ம. ஆ. சுமந்திரன், ‘பிரிக்கப்படாத பிரிக்கவியலாத’ (undivided and indivisible) இலங்கை என்று குறிப்பிட்டு வைத்துள்ள ஆபத்து ஒரு புறம்.

அதைப் போலவே, கஜேந்திரகுமாரும் தனது கட்சி முன்வைத்துவரும் முன்வரைபில் ‘பிரிக்கப்படாத, இணைந்த’ இலங்கை (1.4) என்பதைச் சுய நிர்ணய உரிமை அங்கீகரிப்போடு ஏதோ நிபந்தனைப் படுத்துவது போல (அதாவது ஒரு முறை மட்டும் சுய நிர்ணய உரிமையை, அதுவும் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை நிராகரித்து மட்டுப்படுத்திப் பயன்படுத்துவது போல) மட்டுமல்ல, பிரிந்துபோக எத்தனித்தால் மாகாண அரசு கலைக்கப்படலாம் (21.1) என்று பிறிதொரு அவசரகால உறுப்புரை மூலம் களையவொண்ணா சுயநிர்ணய உரிமையையும் தனித்துவமான இறைமையையும் நிர்மூலமாக்குகின்ற, அரசியலமைப்பு நிபுணர்களால் ‘அணுவாயுத ஆப்பு’ என்று வர்ணிக்கப்படும் கூட்டாட்சித் திட்ட உறுப்புரைகளை முன்வைத்துள்ளார்.

இவை இரண்டும் இடைத்தரிப்பையும் இறுதி இலக்கையும் மறைந்த தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதாவால் சட்டசபையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தையும் அடியோடு துவம்சம் செய்பவை.

நிலைமை இவ்வாறிருக்க, மிகவும் பொறுப்புவாய்ந்த தமிழ்நாட்டின் ஆட்சிபீடத்தில் இருக்கும் பெரிய கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம், தன்னகத்தேயும், தனது கூட்டிலும் கொண்டிருக்கக் கூடிய ஈழத்தமிழர் விவகாரம் தொடர்பான அறிவும் அனுபவமும் கொண்ட மூத்த ஆளுமைகளிடம் தக்க ஆலோசனை கோராமல் முதல்வருக்கான தூதுக் கடிதத்தை வரைந்துள்ளதா என்ற கேள்வி எழுகிறது.



தேர்தல் பரப்புரைக்குத் தேவைப்பட்டாலும் —ஏன் ஒருவேளை வேறு காரணங்களின் நிமித்தம் தான் ஒரு முடிவை மேற்கொண்டாலும் — அதை வெளிப்படுத்தும் போது தந்தை செல்வா முன்வைத்த ஈழத்தமிழர் விடுதலை அரசியலின் அடிப்படைகளைச் சரியாக எடுத்துரைக்கும் அறிவு மிக்கவராயிருந்த மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் மரபில் வந்த திராவிட முன்னேற்றக் கழகம் இவ்வாறான தவறுகளை இழைக்கலாமா என்ற கேள்வி எழுகின்றது.

தந்தை செல்வாவின் முடிவு மேற்குறிப்பிட்ட கூட்டாட்சி முறையை ஈழத்தமிழர் தமது கோரிக்கையாக இனிமேல் ஒருபோதும் முன்வைத்தல் ஆகாது என்பதாகும்.

* * *


முதல்வரின் கடிதம் இறுதியான ஈழத்தமிழரின் மக்களாணை பெற்ற நிலைப்பாடான வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை எடுத்தாளத் தவறியுள்ளது.

கூட்டாட்சியோடு ஒத்துப்போகாதபடியால் அதைத் தவிர்த்துள்ளது.

பதிலாக, திம்புக் கோட்பாடுகளை மேற்கோள் காட்டியுள்ளது.

முதல்வரின்மடல் எடுத்தாளும் நான்கு கோட்பாடுகளில் மூன்று கோட்பாடுகளில் சொற்பொருட் தவறுகள்/ திரிபுகள் இழைக்கப்பட்டுள்ளன.

இரண்டாவது திம்புக் கோட்பாட்டை முதல்வரின் மடல் வருமாறு குறிப்பிடுகிறது:

“வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைத் தமிழ் மக்களின் பாரம்பரிய தாயகமாக ஏற்றுக்கொள்வது (தமிழர் தாயகம்)”

“Acknowledgment of the Northern and Eastern Provinces as the traditional homeland of the Tamil people”

ஆனால், உண்மையான திம்புக் கோட்பாடுகளில் இதன் மூலம் பின்வருமாறு அமைந்துள்ளது:

“Recognition of an identified Tamil homeland and the guarantee of its territorial integrity”

[மூலம்: குறித்த பேச்சுக்களில் நேரடியாக ஈடுபட்டிருந்தோரின் வெளியீடான TAMIL UNITED LIBERATION FRONT Towards DEVOLUTION OF POWER in SRI LANKA MAIN DOCUMENTS August 1983 to October 1987]

வடக்கு கிழக்கு மாகாணங்கள் என்ற இரு கூறாக தமிழ்த் தாயகம் குறிப்பிடப்படவில்லை.

ஓர் அடையாளப்படுத்தப்பட்ட தமிழ்த் தாயகம் என்பதோடு அதற்குரிய ஒருமைத் தன்மையான ஆள்புல (ஆட்சிப்புல அல்லது பிரதேச) ஒருமைப்பாடு தெளிவாகச் சுட்டிக்காட்டப்படுகிறது.

இரண்டு அடிப்படையான தவறுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அடுத்ததாக, மூன்றாவது கோட்பாட்டை மடல் பின்வருமாறு எடுத்தாள்கிறது:

“தமிழ் தேசத்திற்கான தன்னாட்சி உரிமையை உறுதிப்படுத்துதல் (தமிழர் தன்னாட்சி உரிமை); மற்றும்”

“Affirmation of the right to self-determination for the Tamil nation; and”

மூலம் பின்வருமாறு உள்ளது:

“Based on the above, recognition of the inalienable right of self-determination of the Tamil nation”

இதிலே மிக முக்கியமான களையவொண்ணா (inalienable) என்ற பதம் அகற்றப்பட்டுள்ளது. ஏனெனில், களையவொண்ணா என்பது மேற்குறித்த தவறான கூட்டாட்சிக்கு ஒத்துவராத பதமாகும்.

இறுதியாக, நான்காவதான கோட்பாட்டிலும் தவறு:

“மலையகத் தமிழர்களுக்கான முழு குடியுரிமை உரிமைகள் உட்பட, அனைத்து குடிமக்களுக்கும் சமத்துவத்தையும், பாகுபாடின்மையையும் உறுதிசெய்யும் ஒரு கூட்டாட்சி ஆட்சி முறையை நிறுவுதல்”

“Establishment of a federal system of governance that ensures equality and non-discrimination for all citizens, including full citizenship rights for hill- country Tamils”

சரியான மூலம் வருமாறு:

“Recognition of the right to full citizenship and other fundamental democratic rights of all Tamils, who look upon the island as their country”

நான்காவது கோட்பாட்டில் அறவே இல்லாத 'கூட்டாட்சி ஆட்சி முறை' என்ற சொல்லாடல் புகுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறான திரிபுகள் எங்ஙனம் சாத்தியமாயின என்பதை முதல்வர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. பணித்துறை அதிகாரிகளின் தவறாக இருக்கலாம். அவரது அலுவலகத்துக்கே அது வெளிச்சம்.

மாறாக, ஏதேனும் மூன்றாந்தரப்பு அல்லது பிரிவு, இதைத் தயாரித்துக் கொடுத்திருந்தால், அது வேண்டுமென்றே செய்யப்பட்ட திரிபு ஆகும்.

Thimpu Principles
Thimpu Principles [Source: TAMIL UNITED LIBERATION FRONT Towards DEVOLUTION OF POWER in SRI LANKA MAIN DOCUMENTS August 1983 to October 1987]


* * *


தேசம் (nation) என்று எடுத்தியம்பும் திம்புக் கோட்பாடுகளை மேற்கோள் காட்டிவிட்டு, சிறுபான்மை (minority) என்று கோரிக்கையின் இறுதியில் சொல்லப்படுகிறது.

‘ஏக்கிய ராஜ்ஜிய’ என்ற ஒற்றையாட்சித் தன்மையிலும் ஆபத்தான படுகுழியை நிராகரிக்கும் போர்வையில், கூட்டாட்சி என்பதை வெறும் கூப்பாடாகப் பயன்படுத்தி, அதிகாரப் பகிர்வு (power sharing) என்பதற்குப் பதிலாக அதிகாரப் பரவலாக்கம் (power devolution) என்ற சொல்லாடலே இறுதியாகக் கோரப்படுகிறது.

மாகாணசபை முறைமைக்கும் ஒத்துப்போகும் வகையில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது தெரிகிறது.

இந்திய-இலங்கை ஒப்பந்தம் ஈழத்தமிழர் அரசியல் அபிலாசைகளுக்கு உரியதொன்றல்ல. அதற்கு காமினி திசா நாயகாவும் ஜே.என். தீக்ஷித்தும் புகுத்திய தவறான சொல்லாடல்கள் பற்றிய காரணங்கள் உண்டு. அவற்றை விளக்குவது இக்கட்டுரையின் நோக்கம் அல்ல.

அந்த ஒப்பந்தத்தை அது கொண்டுவரப்பட்டபோதே முதல்வர் எம்.ஜி.ஆர் ஒத்துக்கொள்ளுமாறு வலியுறுத்தமாட்டேன் என்று மறுத்துவிட்டார்.

ஈழத்துக்குச் சென்று விடுதலைப் புலிகளோடு போர் புரிந்து திரும்பிய இந்தியப்படைகளை வரவேற்க மறுத்தார் கலைஞர்.

ஆனால், இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை இன்றும் நடைமுறையில் இருப்பது போல வலியுறுத்துகிறது இந்த மடல்.

சீனாவிடம் 99 ஆண்டுகள் ரணில் விக்கிரமசிங்கா ஒரு துறைமுகத்தைக் குத்தகைக்கு விட்டபோதே இந்தியாவிடம் ஒப்புதல் பெறாது மீறிவிட்ட ஒன்றை பதின்மூன்றாம் சட்டத்திருத்தம், மாகாணசபை முறைமையை நிலைநிறுத்த இந்தியாவின் பங்கு அவசியம் என்று கருதுவோர், இன்னும் இருப்பதாகக் கருதுகின்றனர்.

இறுதியாக, ஈழத்தமிழர் என்ற பதத்தையோ ஈழம் என்ற சொல்லையோ டெசோ மாநாட்டுக்கான அழைப்பிலோ தீர்மானங்களிலோ பயன்படுத்தக் கூடாது என்று இந்திய ஒன்றிய அரசு கடும் அழுத்தத்தைக் கொடுத்த போது, அதை மறுத்த கலைஞர் ஈழம், ஈழத்தமிழர், தமிழீழம் என்ற பதங்களைப் பயன்படுத்துவதில் உறுதியாக இருந்தார்.

இந்த மரபும் மடலில் மீறப்பட்டுள்ளது.

எது எவ்வாறாயிருப்பினும், இந்த மடல் ஒரு தூதுமடலே என்ற வகையில், இதில் தோன்றிய தவறுகளைத் தாண்டி இலகுவாகப் பயணித்துவிடலாம்.

ஆனால், தமிழ்நாடு அரசு சட்டமன்றில் இன அழிப்புக்கான சர்வதேச விசாரணை, தனி ஈழத்துக்கான பொதுவாக்கெடுப்பு ஆகிய இரண்டு அடித்தளக் கோரிக்கைகளையும் எவ்வகையிலும் நீர்த்துப் போகச் செய்யாது, தனது எதிர்கால நடவடிக்கைகளில் காத்திரமாக முன்னெடுக்க தேர்தலுக்குப் பின்னாவது தமிழக அரசு முன்வரவேண்டும்.

* * *


கலைஞரின் எழுத்து மரபை நினைவூட்டுவதற்காக அவர் காங்கிரஸ் அரசிலிருந்து விலகுவதாக மேற்கொண்ட முடிவின் போது வெளியான அறிக்கையின் முக்கிய பகுதிகள் ஓர் அனுபவப் பகிர்வுக்காகக் கீழே மீள்பிரசுரிக்கப்படுகிறது:

செய்தியாளர்கள் சந்திப்பு
(19-3-2013)

தலைவர் கலைஞர் :- ஈழத் தமிழர்ப் பிரச்சினையில் ஐம்பதாண்டுகளுக்கு மேலாக தந்தை செல்வா அவர்களின் காலந்தொட்டு, திராவிட முன்னேற்றக் கழகம் அங்குள்ள தமிழர்களின் உரிமைக்காகவும் - தமிழர் வாழ்வாதாரங்களின் பாதுகாப்புக்காகவும் - தமிழ் மொழியின் சமத்துவமான தகுதிக்காகவும் - குரலெழுப்பி வந்துள்ளது.

அறிஞர் அண்ணா அவர்களின் காலத்திலேயே 1956ஆம் ஆண்டு நடைபெற்ற சிதம்பரம் திராவிட முன்னேற்றக் கழக பொதுக்குழுவிலும், தொடர்ந்து கட்சியின் மாநாடுகளிலும், ஈழத் தமிழர்களின் உரிமைக்காக அறப் போராட்டங்கள் பலவற்றை நடத்திய வரலாற்றுப் பெருமை கொண்டது திராவிட முன்னேற்றக் கழகம்.

தந்தை செல்வா அவர்கள் காலத்தில் ஈழத் தமிழர்களுக்காக அமைதியான முறையில் தொடங்கிய எழுச்சியையும், ஈழத் தமிழ்ச் சமுதாயப் புரட்சியையும் ஆயுத பலம் கொண்டு; அரசின் அதிகார வலிமையைக் காட்டி சிங்கள வெறியர்களின் ஆதிக்கத்தை நிலைநாட்டலாம் என்று கருதி செயல் பட்ட சிங்களப் பேரினவாத அரசாங்கத்தின் கொடுமைகளையும், அங்கு வாழும் தமிழர்களின் கலை, கலாச்சாரங்கள் போன்றவைகளையும், அழித்தொழிக்க முனைந்து வன்முறை வெறியாட்டங்களை நடத்திய சிங்கள வெறியர்களுக்கு எதிராக கிளம்பிய விடுதலைப் புலிகள் மற்றும் விடுதலைப் போராளிகள் அந்த மண்ணில் அடுத்தடுத்த நடந்த போரில் பலியானார்கள் என்றாலுங்கூட; அங்கே கொழுந்து விட்டெரிந்த தமிழ் உணர்வு மங்கிப் போய் விடவில்லை என்பதற்கு உதாரணமாக; வரலாற்றில் பதிந்துள்ள பல நிகழ்ச்சிகளைக் கோடிட்டுக் காட்ட முடியும்.

தமிழ் இளைஞர்களும், வாலிபர்களும் தங்கள் இனம் வாழ - மொழி வாழ - நடத்திய வீரமரணப் போராட்டங்கள் கூட தமிழ் உணர்வற்றவர்களால்; எள்ளி நகையாடப்பட்டாலும், அவைகளையெல்லாம் மீறி நமது குறிக்கோள் வெற்றியே முக்கியம் என்ற கொள்கை உறுதியோடு; ஈழப் போரில் மாண்டு மடிந்த போராளிகளுக்கும், அவர்தம் குடும்பத்தாருக்கும் வீர வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிற சூழலில் அவர்தம் காலடி மண்ணெடுத்து, அதனைத் திலகமாக இட்டுக் கொண்டு, அந்தத் திலகத்தின் சாட்சியாக - தமிழ் ஈழத்தில் சிங்களப் பேரினவாதிகளால் நடத்தப்பட்ட - அதிலும் குறிப்பாக ராஜபக்சே அரசின் போர்க் குற்றங்கள் மலிந்த - இரு கருத்துக்கு இடமில்லாத வகையில் இனப் படுகொலையே நடத்தப்பட்டு - உலக அரங்கில் உள்ள நாடுகளின் விவாதத்திற்கு உரியதாக ஆகிவிட்ட இந்தச் சூழலில் உலகில் மிகப் பெரிய ஜனநாயக நாடு என்று மார்தட்டிக் கொள்ளும் இந்தியத் திருநாடு, இந்தப் பிரச்சினையின் ஆழத்தை உணராமல், விளைவுகளைக் கருதாமல், ஒதுங்கி நிற்பதோ; அல்லது எதிர் மறை கருத்துரைப்பதோ - இந்தியாவில் காந்தியடிகளும், இலங்கையில் தந்தை செல்வநாயகமும் சுதந்திரப் போராட்டத்திற்காகத் தேர்ந்தெடுத்து நடத்திய அறவழிகளை - அறவே மூடிவிடுவதற்கான; ஜனநாயக விரோதச் செயல்களாகும்.

இவைகளையெல்லாம் ஐ.நா. மன்றத்திலும், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்திலும் நீதி நெறியோடு ஆய்ந்து பார்த்து - அனைத்து நாட்டு மக்களின் இதயத்தையும் குளிர வைக்கும் முடிவுகளை மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்த்தோம்.

ஆனால் அதற்கு மாறாக இழப்பின் உச்சத்திற்கே தள்ளப்பட்ட இலங்கையும், அந்த இலங்கையின் “தொப்புள் கொடி” உறவு கொண்ட தமிழகம் இடம் பெற்றுள்ள இந்தியாவும், இந்த ஜனநாயக விரோதச் செயல்களுக்கு கதவுகளைத் திறந்து விட்டிருப்பதை இன உணர்வுள்ள எந்த ஒரு தமிழனும் ஏற்றுக் கொள்ள இயலாது.

எனவே “குதிரை குப்புறத் தள்ளியதும் அல்லாமல், குழியும் பறித்த கதை”யாக, அமெரிக்காவின் வரைவுத் தீர்மானத்தை பெருமளவுக்கு நீர்த்துப் போக விட்டதோடு; திராவிட முன்னேற்றக் கழகம் முன்மொழிந்த திருத்தங்கள் எவற்றையும் இந்திய அரசு சிறிதும் பரிசீலனையும் செய்யவில்லை. எனவே, ஈழத் தமிழருக்கு எந்த வகையிலும் பயன்படாத சூழ்நிலைகளே உருவாக்கப்பட்டுள்ள நிலையில், இதற்குப் பிறகும் இந்திய மத்திய ஆட்சியில் திராவிட முன்னேற்றக் கழகம் நீடிப்பது தமிழினத்திற்கே இழைக்கப்படும் பெரும் தீமை என்பதால், திராவிட முன்னேற்றக் கழகம் மத்திய அமைச்சரவையிலிருந்தும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்தும் உடனடியாக விலகிக் கொள்வதென முடிவு செய்து அறிவிக்கப்படுகிறது.

[...]

செய்தியாளர் :- இது தாமதமாக எடுக்கப்பட்ட முடிவு என்று நினைக்கிறீர்களா? ஏனென்றால் 2009ஆம் ஆண்டிலேயே நீங்கள் ஒன்றும் செய்யவில்லை என்று குற்றச்சாட்டு கூறப்பட்டதே?

கலைஞர் :- 2009ஆம் ஆண்டில் நாங்கள் என்ன செய்யவில்லை? அப்போது நாங்கள் ஒன்றும் அமைதியாக இல்லை.

செய்தியாளர் :- பொதுவாக அப்படி ஒரு குற்றச்சாட்டு உங்கள் மீது சொல்லப்பட்டதே?

கலைஞர் :- “பொது” என்பதே ஒரு நல்ல சொல் அல்ல.

செய்தியாளர் :- டெசோவின் அடுத்த கட்ட செயல்பாடுகள் எப்படி இருக்கும்?

கலைஞர் :- டெசோ சார்பில் ஏற்கனவே நடந்த செயல்பாடுகள் மேலும் தொடரும்.

செய்தியாளர் :- நீங்கள் குறிப்பிட்ட திருத்தங்களைக் கொண்டுவராத பட்சத்தில் இந்திய அரசு ஈழத்தமிழர்களுக்குத் துரோகம் செய்து விட்டதாக நினைக்கிறீர்களா?

கலைஞர் :- தற்போது ஐ.நா. மன்றமே அப்படித் துரோகம் இழைத்து விட்டதோ என்று கருதுகிறேன். இந்திய அரசும் கூட.

செய்தியாளர் :- 2009ஆம் ஆண்டில், இந்திய அரசு இலங்கை அரசுக்கு உதவி செய்ததாக ஒரு குற்றச்சாட்டு கூறப்படுகிறதே?

கலைஞர் :- அது உண்மையாக இருந்தால், எதிர்காலத்தில் விசாரிக்கப்பட வேண்டியவற்றில் அதுவும் ஒன்றாக அமையலாம்.

செய்தியாளர் :- அப்படிப்பட்ட நிலையில் இந்திய அரசும் சேர்ந்து போர்க்குற்றம் செய்ததாக கருதலாமா?

கலைஞர் :- அது உண்மையா இல்லையா என்பது முதலில் தெரியட்டும்.

செய்தியாளர் :- நாடாளுமன்றத்தில் நீங்கள் கேட்டபடி திருத்தங்களோடு தீர்மானம் கொண்டு வரப்பட்டால், உங்களுடைய தற்போதைய முடிவை மீண்டும் பரிசீலனை செய்வீர்களா?

கலைஞர் :- அதற்கு நேரம் அதிகமாக இருக்கிறது. இன்று மாலை வரையிலே நேரம் இருக்கிறது, நாளைக்கும் இருக்கிறது, 21ஆம் தேதிக்கு முன்பும் இருக்கிறது. அதற்குள் பாராளுமன்றத்தில் நாங்கள் எண்ணியவாறு இந்தத் தீர்மானம் திருத்தங்களோடு முன்மொழியப்பட்டு, விவாதத்திற்குக் கொண்டுவரட்டும்.

செய்தியாளர் :- உங்களுடைய மத்திய அமைச்சர்கள் எப்போது ராஜினாமா செய்வார்கள்?

கலைஞர் :- இன்று அல்லது நாளை.


Related Articles:
07.08.18   Kalaignar Karunanidhi passes away at 94
27.03.13   Tamil Nadu Assembly resolves for UN referendum on separate E..
16.08.12   Schalk writes further on Eezham
13.08.12   Indian protest to Eezham provocative: Peter Schalk
12.08.12   TESO resolution calls for UN Referendum
09.08.12   New Delhi infringes into historical and cultural rights of E..


Chronology:

 

Latest 15 Reports
13.01.26 11:17   Photo
பொதுவாக்கெடுப்பை, இன அழிப்பு நீதியைக் காற்றில் பறக்கவிட்ட தமிழக முதல்வர்
13.01.26 02:08  
தமிழ்நாடு, தமிழீழத்துக்காக மட்டுமல்ல, தனக்காகவும் செய்யவேண்டியது
11.01.26 15:02   Photo
Declaring and disabling: TNPF neutralises Tamil sovereignty, self-determination & referendum
03.01.26 14:10   Photo
TNPF deploys ‘Federalism’ to dislodge Tamil Self-Determination and the Referendum call
18.12.25 09:30  
மறுக்கமுடியாத சுயநிர்ணய உரிமையைக் களைய முனையும் கூட்டாட்சிக் கோரிக்கை
23.07.25 15:17  
கறுப்பு ஜூலை கற்றுத்தரும் கடும் எச்சரிக்கை!
18.05.25 01:31  
அமெரிக்க வியூகத்துள் இந்திய-இலங்கை பாதுகாப்பு உடன்படிக்கை
21.09.24 16:12   Photo
JVP always denied Eezham Tamils’ inalienable self-determination: Anthropology scholar
18.09.24 21:30   Photo
Sinhala leftists need careful perusal of Lenin’s definition of Right to Self-Determination
30.08.24 15:27   Photo
Viraj exposed West’s criminalization of Tamil struggle
30.08.24 09:08  
‘பொதுச்சபை’ நகர்வை ‘சிவில் சமூக அமையம்’ தரும் படிப்பினைகளின் கண்கொண்டு நோக்குதல்
20.08.24 17:59   Photo
Viraj teaches Zone of Peace, Peace Process, Crimes Against Peace
18.08.24 21:23   Photo
Viraj Mendis: A beacon of international solidarity and a pillar in the Eelam-Tamil liberation struggle
18.08.24 16:47   Photo
Viraj in Tamil Radical Politics
18.08.24 11:27  
மூலோபாயத்தையும் தந்திரோபாயத்தையும் தொலைத்த தேர்தல் அரசியலைத் திருத்த இயலுமா?
 
Find this article at:
http://www.tamilnet.com/art.html?catid=25&artid=40002