மூலோபாயத்தையும் தந்திரோபாயத்தையும் தொலைத்த தேர்தல் அரசியலைத் திருத்த இயலுமா?
[TamilNet, Sunday, 18 August 2024, 11:27 GMT]
இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள சூழலில், இது தொடர்பாக ஈழத்தமிழர் தேசம் கடைப்பிடிக்கவேண்டிய அரசியல் நிலைப்பாடு என்ன என்ற கேள்வியை முன்வைத்து, தேர்தல் அரசியல் தொடர்பான எண்ணங்களும் முடிவுகளும் மூன்று முனைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த மூன்று முனைகளும் ஈழத்தமிழர் தேசிய விடுதலைக்கான கொள்கை சார் அரசியலில் இருந்து ஏற்கனவே வழுவியுள்ளன அல்லது அவ்வாறு வழுவுவதற்கான அறிகுறிகளை வெளிப்படுத்தியுள்ளன. மேலெழுந்தவாரியாக ஊடக அறிக்கைகளையும் உடன்படிக்கைகளையும் படிக்கும்போது ஈழத்தமிழர் தேசிய விடுதலைக்கான அடிப்படைகளைச் சரியாகக் கையாண்டிருப்பது போன்ற சொற்பொருட் தோற்றம் ஏற்படலாம். ஆனால், கொள்கைசார் விடுதலை அரசியல் பற்றிய அறிவோடு உற்று நோக்கும் போது இவற்றுக்குப் பின்னால் வைக்கப்பட்டுள்ள பொறிகளைத் துல்லியமாக அடையாளம் காண முடியும். அந்த அறிவைப் பகிர்ந்துகொள்வது விடுதலை அரசியலின் செல்நெறியை இனியாதல் சரியாக வழிப்படுத்த ஆக்கபூர்வமானதாக அமையும்.
ஆக்கிரமித்துள்ள இன அழிப்பு இலங்கை அரசின் தேர்தல் அரசியலுக்குள் நடைமுறைச்சாத்திய அரசியல் (pragmatic politics) செய்கிறோம் என்ற போர்வையில், ஆக்கிரமிக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர் தேசத்தின் கொள்கை சார் அரசியலை (principled politics) அவ்வரசின் ஒற்றையாட்சி அரசியலமைப்புக்குள் நிரந்தரமாகத் தொலைத்துவிடும் விளைவையே இந்த மூன்று முனைகளும் உருவாக்கிவருகின்றன. இதுவே இலங்கை அரசின் உத்தியும் கூட.
இலங்கை அரசியலமைப்பிற்குள் எதைக் கையாள்வது என்பதை விட அதற்கு வெளியில் வைத்து எதைக் கையாள்வது என்பது பற்றிய தெளிவு ஈழத்தமிழர்களுக்கு முக்கியமானது.
இது தந்தை செல்வாவின் காலத்திலிருந்து 2009 ஆம் ஆண்டு வரை ஈழத்தமிழர் விடுதலை அரசியலில் கூர்ப்புரீதியாகப் பொருத்தமான முறையிற் கையாளப்பட்டுவந்தது.
2009 ஆம் ஆண்டின் பின் தமிழ் சிவில் சமூகம் மற்றும் தமிழ் மக்கள் பேரவை போன்ற முன்னெடுப்புகள் ஊடாக விடுதலை அரசியல் மீண்டும் முளைவிட்டபோதும், அவையும் இறுதியில் அச்சுத்தவறின. 2016 ஆம் ஆண்டளவில் முற்றாக மங்கிவிட்டன.
விளைவாக, இலங்கை அரசியலமைப்புக்கு வெளியே சுயநிர்ணய உரிமையை எடுத்தாளும் மூலோபாய அச்சில் இருந்து தாயகத்திலுள்ள ஈழத்தமிழர் அரசியல் ஒட்டுமொத்தமாக விலகியுள்ளது.
அதே அரசியலமைப்புக்கு உட்பட்ட தேர்தல் அரசியலை எதற்கு, எவ்வாறு பயன்படுத்துவது என்ற தந்திரோபாயப் போக்கில் இருந்து அனைத்துக் கட்சிகளும் அமைப்புகளும் நிலைதடுமாறி விலகியுள்ளன.
இந்த மூலோபாயக் குறைபாடுகளும் தந்திரோபாயக் குறைபாடுகளும் விரைந்து களையப்படவேண்டியவை.
மூலோபாயக் குறைபாடுகள் எவை என்பதையும் அவற்றைத் தவிர்க்கும் வழிவகைகளையும் விரிவாகப் பார்க்க முன்னர், தந்திரோபாயக் குறைபாட்டையும் அதைத் தவிர்க்கும் வழிவகையையும் சுருக்கமாக நோக்குவோம்.
1. தந்திரோபாயக் குறைபாடும் அதைத் தவிர்க்கும் வழிவகையும்இலங்கையில் தேர்தல் அரசியலைத் தனி வழியாகக்கொண்டு ஈழத்தமிழர் அரசியல் விடுதலையைக் காணலாம் என்று அரசியற் கட்சிகளின் தலைமைகள் கருதுவதும், மக்கள் அவ்வாறு நம்பவைக்கப்படுவதும், கொள்கை சார் விடுதலை அரசியலின் மூலோபாயத்துக்கு முரணானது.
இலங்கை அரசோடு அரசியல் தீர்வு தொடர்பான முதன்மைப் பேச்சுவார்த்தையாளராகத் (Chief Negotiator) தாம் ஈடுபடுவதற்கான ஆணையைத் தமக்கு ஈழத்தமிழர் வாக்குகள் தருகின்றன என்று தேர்தல் அரசியலில் ஈடுபடுவோர் சிந்திப்பதும், அவ்வாறு மக்களைச் சிந்திக்கத் தூண்டுவதும், பெரிய குறைபாடாகக் காணப்படுகிறது.
தேர்தல் அரசியற் கட்சிகள் விடுதலை அரசியலுக்கும், சுயநிர்ணய உரிமைக் கோரிக்கைக்கும் குந்தகம் விளைவிக்காது செயற்பட்டால் அதுவே பெரிய சாதனை என்பதாகத் தற்போதுள்ள நிலைமை காணப்படுகிறது.
உண்மையில், ஈழத்தமிழர் தேசிய விடுதலைக்குக் குந்தகம் விளைவிக்கக்கூடிய சக்திகள் தேர்தல் அரசியல் ஊடாக தமிழ் மக்களின் ஆணை பெற்ற பிரதிநிதிகள் போலத் தெரிவு செய்யப்பட்டு, ஈழத்தமிழர் தமது மக்களாணையின் பாற்பட்ட சுய நிர்ணய உரிமையை எடுத்தாள்வதற்குத் தடங்கலாக இடமளிக்கக்கூடாது என்ற தந்திரோபாயத்துக்காக மட்டுமே நல்ல சக்திகளாக ஈழத்தமிழ்த் தேசியப் பிரதிநிதிகள் இலங்கை அரசியலமைப்புக்கு உட்பட்ட தேர்தல்களில் பங்கேற்கவேண்டும்.
அன்றேல், தேர்தல் அரசியல் ஊடாக எவரும் தேர்ந்தெடுக்கப்படாவண்ணம் தமிழர்கள் முற்றிலும் தேர்தல் அரசியலைப் புறக்கணிக்கவேண்டும்.
இந்த இரண்டு தேர்வுகளில் எதை முன்னெடுப்பதென்றாலும் அதற்குத் தேர்தல் அரசியலுக்கு அப்பால், தேர்தல் அரசியல் கட்சிகளால் எதுவகையிலும் கட்டுப்படுத்த இயலாத பலமான ஒரு மக்கள் இயக்கம் தேவைப்படும்.
1947, 1972, 1978 ஆகிய ஆண்டுகளில் தமிழ் மக்களின் ஆணைக்குப் புறம்பாக இயற்றப்பட்டு நடாத்தப்படுகின்ற ஒற்றையாட்சி அரசியலமைப்புக்கு உட்பட்ட தேர்தல்களிற் பங்கேற்போர் எவரும் ஈழத்தமிழர் தேசத்தின் அரசியற் தீர்வைக் காணபதற்கான ஆணைபெற்ற ஏக பிரதிநிதிகளாகத் (sole representatives) தம்மைப் பாவனை செய்துகொள்ளாது, அவ்வாறான இலங்கை அரசியலமைப்புக்கு உட்படாத மூலோபாய நகர்வுக்குரிய ஏக பிரதிநிகள் யார் என்பதை நிறுவுவதற்கு அவ்வப்போது தேவைப்படும் மக்களாணையைப் பெற்றுக்கொடுக்கும் பதிலாளிகளாக (proxies) மட்டுமே தம்மை, ஆறாம் சட்டத்திருத்தத்துக்கு உட்பட்டுப் பயணிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் சரி மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி உறுப்பினர்களும் சரி, பாவனை செய்து கொள்ளவேண்டும்.
அரசியல் வேணவாவை ஜனநாயக வழியில் வெளிப்படுத்துவது தொடர்பாக 1947 சோல்பரி அரசியலமைப்புக்குள் ஏதோ ஒரு வகையில் 1977 ஆம் ஆண்டு வரை நீடித்த சொற்பக் கருத்துச் சுதந்திர வெளியும் ஆறாம் சட்டத்திருத்தத்தின் ஊடாக 1983 ஆம் ஆண்டோடு முற்றாக இல்லாதொழிக்கப்பட்டுவிட்ட சூழலில், தற்போதுள்ள தேர்தல் அரசியல் வெளி எதற்கு உதவும், எதற்கு உதவாது என்பதில் தெளிவான பொது நிலைப்பாடு இருக்கவேண்டியது அவசியம்.
சுயநிர்ணய உரிமையை மட்டுப்படுத்தாமல், அதாவது எதுவிதத்திலும் சுதந்திரத்தை (பிரிவினையை) மறுக்காமல் அல்லது குறைக்காமல் தமது பிரேரிப்புகளை தேர்தல் அரசியற் கட்சிகள் முன்வைக்கலாம். தேர்தல் அரசியலுக்கு அப்பாற்பட்ட தலைமையொன்றுக்கான மக்களாணையைப் பெற்றுக்கொடுக்கலாம். இதற்கு முரணான அமிலப் பரிசோதனைகளில் தேர்தல் அரசியல் கட்சிகள் ஈடுபடக்கூடாது.
நடைமுறையில், தேசக்கட்டலுக்கு (nation-building) ஆக்கபூர்வமாகப் பங்களிப்பதைத் தமது உத்தியாகக் கொண்டு தேர்தல் அரசியற் கட்சிகள் செயற்படுவது நல்லது.
தேசக்கட்டல் பற்றிய தெளிவான செயற்திட்டம் அவசியம்.
தாயகத்தில் சமூக விடுதலை, பிரதேச வேறுபாடுகளுக்கு மேலான ஒற்றுமை, சமூக மட்டத்தில் முன்னெடுக்கப்படும் பொருண்மியத் திட்டங்கள், கூட்டு நினைவுத்திறம் ஆகியவை மக்கள் மத்தியில் முறையாகப் பேணப்படாதுவிடின் ஆக்கிரமிப்பு அரசின் தேர்தல் அரசியல் மக்களைத் திண்டாட்டமான தெரிவுகளுக்குள் இட்டுச் செல்லும்.
ஈழத்தமிழர் தேசத்துக்கான சர்வதேச ஏக பிரதிநிதித்துவத்துக்குரிய கூட்டுத் தலைமையாகவோ தலைமைப் பேச்சுவார்த்தையாளர்களாகவோ இலங்கைத் தேர்தல் அரசியலில் ஈடுபடுவோர் தம்மை உருவகித்துச் செயற்படுவது கொள்கை சார் விடுதலை அரசியலுக்கு ஆபத்தைத் தருவதாகவே போய்முடியும்.
ஈழத்தமிழர் தேசம் என்பது ஆக்கிரமிக்கப்பட்ட தாயகத்தை மட்டும் கொண்டதல்ல, புலம்பெயர் சமூகத்தையும் இணைபிரியா அங்கமாகக் கொண்டது. தாயகத்திலான தேர்தல் அரசியலுக்குள் புலம்பெயர் சமூகமும் விடுதலை அரசியலைத் தொலைத்துவிட நிர்ப்பந்திக்காது தேசக்கட்டல் முன்னெடுக்கப்படவேண்டும்.
2. மூலோபாயம் தொடர்பான குறைபாடுகளும் அவற்றைத் தவிர்க்கும் வழிவகைகளும்ஈழத்தமிழர் சுயநிர்ணய உரிமைக் கோட்பாடு ஐரோப்பிய காலனித்துவக் காலத்தை உள்ளடக்கியதான நியாயப்பாடுகளில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு நிறுவப்படுவது.
1945 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கப்பட்டபோது,
அதன் சாசனத்தில், உலகில் அந்நிய காலனித்துவத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ள பகுதிகளில் சுயநிர்ணய உரிமையின் பாற்பட்ட தன்னாட்சியை (Self-Government) எவ்வாறு உறுதிப்படுத்துவது என்பதற்கு இரண்டு விதமாகப் பொறுப்புகள் பிரிக்கப்பட்டு அப்போதிருந்த உறுப்பு நாடுகளிடம் அப் பொறுப்புக் கையளிக்கப்பட்டிருந்தது.
இவ்விரு பொறுப்புகளையும் ஐ.நா. சாசனத்தின் பதினோராம் அத்தியாயமான தன்னாட்சி அதிகாரமற்ற பிரதேசங்கள் ("Declaration regarding Non-Self-Governing Territories") என்பதன் கீழுள்ள 73-74 வரையான உறுப்புரைகளாகவும், பன்னிரண்டாம் அத்தியாயமான சர்வதேச அறங்காவலர் அமைப்பு (International Trusteeship System) என்பதன் கீழுள்ள 75-85 வரையான உறுப்புரைகளாகவும் ஐ.நா. சாசனம் வகுத்திருந்தது.
ஐ.நா.வின் பொறுப்பில் பொதுவாக்கெடுப்பு, சுயநிர்ணய உரிமை உறுதிப்படுத்தப்படல் ஆகியவை மேற்குறித்த பொறிமுறைகளுக்குள் அடையாளப்படுத்தப்பட்டு நிரலிடப்பட்ட உலகப் பகுதிகளுக்கு மட்டுமே உரியது என்பதாகவும், இதர பகுதிகள் சுய ஆட்சியைப் பெறும் பயணத்தில் ஏற்கனவே இருப்பதால் விரைவில் ஐ.நா. உறுப்புரிமையைப் பெற்றுவிடும் என்ற அடிப்படையில் மேற்குறித்த நிரல்களுக்குள் அவை சேர்க்கப்படாத நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டது.
அப்பொழுது, இலங்கையில் தன்னாட்சி ஜனநாயக முறையில் உருவாக்கப்படும் பொறிமுறைக்கான வேலைத்திட்டத்தை சர்வஜன வாக்குரிமையோடு பிரித்தானியா முன்னெடுத்துக்கொண்டிருந்தமையால் மேற்குறித்த இரண்டு பொறுப்புகளுக்குள்ளும் ஈழத்தமிழர் தாயகத்தை, பிரிட்டிஷ் இந்தியா உள்ளிட்ட வேறு பல உலகப் பகுதிகளைப் போல, அக் காலனித்துவ நாடு பாரப்படுத்தியிருக்கவில்லை.
அதுமட்டுமல்ல, ஈழத்தமிழர் தேசம் தனியான சுயநிர்ணய உரிமை அலகென்ற நடைமுறையையும் 1833 ஆம் ஆண்டில் பிரித்தானியா ஏற்கனவே இல்லாது செய்திருந்தது.
மேற்குறித்த இரு பொறுப்புகளுக்குள்ளும் பாரப்படுத்தப்படாத பகுதிகளில், ஏற்கனவே காலனித்துவ தரப்புகளால் வகுக்கப்பட்ட நாடுகளுக்கான எல்லைகளுக்குள் இருக்கக்கூடிய வெவ்வேறு தேசிய இனங்கள் தமக்கென்று தனிவேறான சுயநிர்ணய உரிமையைக் கோர இயலாது எனும் நடைமுறை ஐ.நா. மன்றில் உருவாக்கப்பட்டிருந்தது என்பதை இங்கு குறிப்பாக நோக்கவேண்டும்.
இதற்கான கோட்பாட்டு அடிப்படை நீலக் கடல் விதி (
Blue Water Rule) அல்லது உப்புக் கடல் ஆய்வுரை (Salt Water Thesis) என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.
ஐ.நா. பொதுச் சபையின் 637 ஆவது தீர்மானத்தின் ஏழாம் உறுப்புரை 1952 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இதை வரைபுபடுத்தியுள்ளது.
சட்ட மொழியில் இது uti possidetis juris என்ற இலத்தீன் மொழிக் கலைச் சொல்லால் சித்தரிக்கப்படுகிறது. இதன் ஆங்கில மொழியிலான விளக்கம் பின்வருமாறு இருக்கும்: “Emerging states presumptively inherit their pre-independence administrative boundaries.”
ஒரு நாடு காலனித்துவத்தில் இருந்து ‘விடுதலை’ பெற்று ஐ.நா. உறுப்புரிமை பெற்றபின், அதன் எல்லைக்குள் இருக்கும் அனைவரும் ‘ஒரு மக்கள்’ என்றும் அந்த ஒரு மக்களுக்குப் பொதுவான ‘ஒரு சுயநிர்ணய உரிமை’ மாத்திரமே அதற்கு ஒட்டுமொத்தமாக இருக்குமென்றும், அந்த நாட்டின் முழுமையான பிரதேச ஒருமைப்பாட்டுடன் (territorial integrity) ஒத்துப்போவதாக மட்டுமே அந்தச் சுயநிர்ணய உரிமை கையாளப்படவேண்டும் என்பதே ஐ.நா. கடைப்பிடித்த ஈழத்தமிழருக்கு ஒவ்வாத நடைமுறை.
இவ்வாறு, ஈழத்தமிழர் தாயகம் மேற்குறித்த இரண்டு பொறுப்புகளுக்குள்ளும் உள்ளடக்கப்படாமைக்கும் அல்லது தனிவேறான சுயநிர்ணய உரிமை அலகாகக் கருதப்படாமைக்குமான முழுப் பொறுப்பும் பிரித்தானியாவுக்கே இருக்கிறது.
அதாவது, வேறுவிதமாக இதைச் சொல்வதானால் ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை மறுத்த முதலாவது சர்வதேசத் தரப்பு பிரித்தானியா ஆகும்.
பிரித்தானியா மேற்குறித்தவகையில் சுயநிர்ணய உரிமையை மறுத்த போது அதை எதிர்த்து ஈழத்தமிழர் தலைவர்கள் சுயநிர்ணய உரிமையைக் கோரினார்கள்.
இதைச் சரியாக விளங்கியிருத்தல் ஈழத்தமிழர் சுயநிர்ணய உரிமை தொடர்பில் பிரதானமானது.
ஈழத்தமிழர் டொனமூர் சீர்திருத்தங்களை ஏற்றுக்கொண்டிருக்கவில்லை, பின்னர் சோல்பரி ஆணைக்குழுவின் முடிவுகளையும் ஏற்றுக்கொண்டிருக்கவில்லை.
இப்படியாக, இலங்கையில் முழுமையான தன்னாட்சி அதிகாரம் ஏற்பட முன்னரே அரசியலமைப்புத் தொடர்பான சமூக உடன்படிக்கை (social-contract) ஒன்று ஜனநாயக முறையில் உருவாக்கப்படாது புறக்கணிக்கப்பட்டது.
ஈழத்தமிழர் சுயநிர்ணய உரிமையை முதலில் மறுத்த பிரித்தானியாவுக்கு இது தொடர்பில் வரலாற்றுரீதியான பொறுப்புக்கூறல் இருக்கிறது. ஐ.நா. சபைக்கு இது தொடர்பில் நேரடிப் பொறுப்பில்லை.
ஆகவே, ஐ.நா. சபையின் நடைமுறைகளதும் விதிகளதும் பிரகாரம் ஈழத்தமிழர் சுயநிர்ணய உரிமையைக் கோருகிறார்கள் என்று மட்டுப்படுத்திச் சொல்லிக்கொள்வது ஈழத்தமிழர் சுய நிர்ணய உரிமைக் கோட்பாட்டுக்கு ஆபத்தானது.
1924 ஆம் ஆண்டிலே சுயநிர்ணய உரிமை அலகுக்கான நியாயப்பாடு ஈழத்தமிழர் தலைவர்களால் வெளிப்படுத்தப்பட்டதாகச் சொல்லப்படுகிறபோதும் அதுகுறித்து அக் காலத்திலே பதியப்பட்ட நம்பகமான எழுத்து மூல ஆதாரங்கள் இதுவரை சரியாக முன்வைக்கப்படவில்லை.
1970களின் நடுப்பகுதியில் வெளியான சில நூல்களை அடிப்படையாகக் கொண்டு 1924 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட முடிவுகளை ஆதாரபூர்வமாகவும் சட்ட அடிப்படையிலும் எடுத்தாளமுடியாது. அவ்வாறு செய்ய முனைவது மகாவம்ச வரலாறு போல் ஆகிவிடும்.
உரிய காலத்திலே மேற்கொள்ளப்பட்ட பதிவு ஆதாரங்களே உலக நீதிமன்று போன்ற இடங்களில் ஏற்புடையதாகக் கருதப்படும் என்பதால் அவை உரியமுறையில் தேடிக் கண்டுபிடிக்கப்படவேண்டும் (இதைப் போல, இறுதித் தமிழரசனின் பிரதானிகளுடன் போர்த்துக்கேயக் காலனித்துவம் சார்பாக ஸ்பானிய மன்னனின் பிரதானிகள் 1612 ஆம் ஆண்டு
நல்லூரில் வைத்து எழுதிய உடன்படிக்கையின் உள்ளடக்கம் எழுத்தாதாரமாக பொதுவெளியில் இல்லாதுள்ளது).
இருப்பினும், 1947 ஆம் ஆண்டு சோல்பரி அரசியலமைப்பை ஈழத்தமிழர்கள் மிகத் துல்லியமாக நிராகரித்தது மட்டுமல்ல, அப்போதே ஈழத்தமிழர் தலைவர்கள் தனித்துவமான தேசிய சுயநிர்ணய உரிமை தொடர்பான நிலைப்பாட்டைத் தெளிவாக வெளிப்படுத்தியிருந்தார்கள் என்பதும் மறுக்கமுடியாத வரலாற்று உண்மையாகிறது.
1947 நவம்பர் 20 ஆம் நாள் தமிழர் தரப்பினர் பிரித்தானிய ஆளும் தரப்பை நோக்கி, “இப்பொழுது இருப்பதைப் போன்ற, சட்டசபை - மந்திரிசபைகளுடன் கூடிய ஒற்றையாட்சி அரசாங்கத்தைத் தமிழர்கள் ஒரு பொழுதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தகுந்த மாற்றுமுறை இல்லாதபடியால் நாங்கள் தமிழ் மக்களுக்குச் சுயநிர்ணய உரிமை கோருகிறோம்,” என்ற செய்தியை எழுத்துமூலமாக வழங்கியிருந்தனர்.
இந்தவகையில், ஈழத்தமிழர் சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டில் காலனித்துவத்துக்கு முன்னான ‘இறைமையை மீட்டுக்கொள்ளல்’ (Reversion to sovereignty) என்ற அடிப்படை எடுத்தாளப்படவேண்டியது என்பது குறிப்பாக நோக்கப்படவேண்டியது. பிரித்தானியாவுக்கு இதுதொடர்பில் பொறுப்புக்கூறல் உள்ளது என்பதும் சிறப்பாக நோக்கப்படவேண்டியது.
இலங்கையின் சர்ச்சைக்குரிய ‘சுதந்திரத்தின்’ பின், 1949 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் நாள் தமிழரசுக்கட்சி ஆரம்பிக்கப்பட்டபோது அதன் தலைமைப் பேருரையில் சா.ஜே.வே. செல்வநாயகம் அவர்கள், தனித் தேசிய இனம், சுதந்திரத் தமிழரசு என்பவற்றோடு சமஷ்டி என்ற பெயரில் கனடா, சுவிற்சர்லாந்து போன்ற நாடுகளை அரசியற் தீர்வுக்கான மாதிரிகளாக எடுத்துக்காட்டியிருந்தார். ஐரிஷ் விடுதலைப் போராட்டத்தையும் முன்னுதாரணமாக செல்வநாயகம் எடுத்தாண்டிருந்தார்.
இதன் மூலம், தொடர்ச்சியாகச் சுயநிர்ணய உரிமையைத் தக்கவைக்கும் இணைப்பாட்சிக்கு ஒப்பான ஒரு கூட்டாட்சியைக் கொள்கையாக அவர் முன்வைக்க முற்பட்டமை தென்படுகிறது. அதை சமஷ்டி என்ற பெயரில் அப்போது அவர் குறிப்பிட்டுவந்தார்.
கனடாவும் சுவிற்சர்லாந்தும் அரசியலமைப்புகளை உருவாக்கிக்கொண்டமை கூட்டாட்சியை (Federation) விடவும் இணைப்பாட்சிக்கு (Confederation) உரிய முன்னுதாரணங்களாகும்.
இணைப்பாட்சி என்பது காலப்போக்கில் கூட்டாட்சி நோக்கி அல்லது சுதந்திரம் நோக்கிப் பயணிப்பதற்கான ஒரு வழிவரைபட அரசியலமைப்புப் பொறிமுறை.
1951 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழரசுக்கட்சியின் முதலாம் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட முதலாம் தீர்மானத்தில் தனிவேறான தேசம் என்ற அடிப்படையில் தமிழ் பேசும் மக்களுக்கு மறுக்கவொண்ணா உரிமையாகச் சுயநிர்ணய உரிமை அடிப்படையானது என்பது குறிப்பிடப்படுகிறது. அதுமட்டுமல்ல, பொதுசன வாக்கெடுப்பும் அதே தீர்மானத்தில் கோரப்பட்டுள்ளது. இதற்கும் மேல், அம் மாநாட்டின் இரண்டாம் தீர்மானம் சோல்பரி அரசியலமைப்புத் திட்டத்தை “அறிவுக்கொவ்வாததெனவும் தமிழ் பேசும் மக்களை அடிமைகொள்வதற்கேதுவானதெனவும் இம்மாநாடு கண்டிக்கிறது,” என்று கடுமையான தொனியில் நிராகரித்திருந்தது. இது ஆதாரபூர்வமான வரலாறு.
இலங்கை ஐ.நா. உறுப்புரிமையைப் பெற்றது 1955 ஆம் ஆண்டின் இறுதியிலாகும். அதைப் பெற்று ஒரு சில மாதங்களுக்குள் தனிச்சிங்களச் சட்டமும் இன அழிப்பு வேலைத்திட்டமும் இலங்கை அரசால் முன்னெடுக்கப்பட்டது என்பது இங்கு குறிப்பாக நோக்கப்படவேண்டியது.
1960 ஆம் ஆண்டு ஐ. நா. பொதுச் சபை சுயநிர்ணய உரிமை தொடர்பாக அடுத்த கட்டமாக
1514(XV) ஆம் இலக்கத் தீர்மானத்தை நிறைவேற்றியது.
அந்தத் தீர்மானத்தின் இரண்டாம் உறுப்புரையானது அனைத்து மக்களுக்கும் சுயநிர்ணய உரிமை உண்டென்று அகலமாக வரையறை செய்துவிட்டு, அதை மட்டுப்படுத்தும் விதமாகத் தனது ஆறாம் உறுப்புரையில் வேறொரு விடயத்தைப் புகுத்தியது. அதாவது, ஏற்கனவே உறுப்புரிமை பெற்றுவிட்ட நாடுகளின் நாட்டு எல்லைகளை மாற்றும் வகையில் அந்த நாடுகளுக்குள் இருக்கும் எவரும் தனிவேறான சுயநிர்ணய உரிமை அலகொன்றைக் கோர முற்பட்டால் அது ஐ. நா. சாசனத்துக்கு முரணானது என்று கருதப்படும் என்றது அந்த ஆறாம் உறுப்புரை.
ஆக, ஈழத்தமிழர் சுயநிர்ணய உரிமை என்பது, ஐ.நா. நடைமுறைக்கும் பிரித்தானியாவின் நிலைப்பாட்டுக்கும் மாறாக, காலனித்துவத்திலிருந்து விடுதலை பெறுவதற்குரிய தேசிய சுயநிர்ணய உரிமையாக (national self-determination) ஆரம்பத்திலேயே ஈழத்தமிழர்களால் வரையறை செய்யப்பட்டுவிட்டது.
இலங்கை ஐ. நா. உறுப்புரிமை பெற முன்னரே, ஈழத்தமிழர் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையை முன்வைத்தமை குறிப்பாக நோக்கப்படவேண்டியது. அது ஏகாதிபத்திய எதிர்ப்பாகவும் பார்க்கப்படவேண்டியது.
இந்தப் பின்னணியை மறைத்துவிட்டு, அல்லது வரலாற்றைக் கத்தரித்துவிட்டு, புதிய விளக்கங்களைச் சுயநிர்ணய உரிமைக்குப் போட்டுக்கொள்ளவேண்டும் என்று சிந்திப்பது அடிப்படையில் கோளாறானது.
2009 ஆம் ஆண்டில் இன அழிப்புப் போரினால் மெய்நடப்பு அரசும் இராணுவப் பலமும் அழிக்கப்பட்டதால், சுயநிர்ணய உரிமைக் கோரிக்கைக்கான பௌதிக பலம் இல்லாது போய்விட்டதென்றும், அதனால் சுயநிர்ணய உரிமையை இனிமேல் ஏதோ ஒரு வகையில் மட்டுப்படுத்தித்தான் சித்தரிக்கவேண்டும் என்றும் சிந்திப்பது கோட்பாட்டு ரீதியாக மேலும் கோளாறானது.
தந்தை செல்வா கூட்டாட்சி கோரிய காலத்தில் இருந்தது சோல்பரி அரசியலமைப்பு.
அதை இலங்கை அரசு ஒரு தலைப்பட்சமாக இல்லாதொழித்து புதிய அரசியலமைப்பைக் கொண்டுவந்தவுடன் அந்த நகர்வை அவர் நிராகரித்து, தனது பிரதிநிதித்துவத்தைத் துறந்து, காங்கேசன்துறைத் தொகுதியில் இடைத்தேர்தலுக்கான சூழலை உருவாக்கி, தமிழ் மக்களின் நிராகரிப்புக்குரிய தேர்தல் விஞ்ஞாபனத்தை முன்வைத்துப் போட்டியிட்டு அதற்குரிய மக்களாணையை வென்றெடுத்துக் காட்டியிருந்தார் என்பதும் வரலாறு.
1972 ஆம் ஆண்டுக் குடியரசு யாப்பு, 1978 ஆம் ஆண்டில் ஜே. ஆர். ஜெயவர்த்தனா மீண்டும் ஒருதலைப்பட்சமாகக் கொண்டுவந்த அரசியல் யாப்பு ஆகிய இரண்டின் சட்டகங்களுக்குள்ளும் கூட்டாட்சிக் கோரிக்கையை தந்தை செல்வா முன்வைக்கவில்லை. அவர் தொடர்ந்து உயிர்வாழ்ந்திருந்தால் அவ்வாறு முன்வைத்திருக்கவும் மாட்டார்.
இந்தவகையில், தற்போது கூட்டாட்சி என்ற கொள்கையை மீண்டும் தூசிதட்டி எடுத்து முன்வைத்திருக்கும் இக்காலத்துத் தமிழரசுக் கட்சி உள்ளிட்ட அனைத்துத் தேர்தல் அரசியற் கட்சியினரும் தந்தை செல்வாவுக்கு நேர் விரோதமான அரசியலில் ஈடுபட்டிருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்கப்படவேண்டியவர்களே.
கூட்டாட்சி என்பதற்குப் பதிலாக இணைப்பாட்சி என்று கொள்கையை முன்வைப்பதே சுயநிர்ணய உரிமையைத் தொடர்ந்தும் தக்கவைக்க இடமளிக்கும். இணைப்பாட்சி முறையூடாகப் பயணித்து, பின்னர் கூட்டாட்சியாக நீடிக்கும் கனடா, சுவிற்சர்லாந்து போன்ற நாடுகளையே தந்தை செல்வா கூட முன்னுதாரணமாகக் கொண்டிருந்தார் என்பது ஏற்கனவே சுட்டிக்காட்டப்பட்ட ஒன்று.
இணைப்பாட்சி என்ற வழிவரைபடத்தின் ஊடாகப் பயணிக்காது சமஷ்டி என்ற கூட்டாட்சியை சுயநிர்ணய உரிமையைப் பயன்படுத்தி உருவாக்க முற்பட்டால், கூட்டாட்சி உருவாக்கப்பட்டாலும் சுயநிர்ணய உரிமையைத் தனியான அலகாகத் தக்கவைக்க இயலாத நிலைதான் ஏற்படும்.
இதனால், சுதந்திரத்தை (பிரிவினையை) ஒருபோதும் மறுக்காமல், அதேவேளை அதை நேரடியாகவும் கோராமல் தீவுக்குள் இருக்கும் தேர்தல் அரசியலைத் தந்திரமாகப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, கூட்டாட்சி என்ற கோரிக்கையை முன்வைத்து மக்களாணையை நிராகரிப்பது அடிப்படையிலேயே தவறானது. தந்தை செல்வாவின் அமைதிவழிப் போராட்டத்துக்கும் தலைவர் பிரபாவின் ஆயுதவழிப் போராட்டத்துக்கும் முற்றிலும் முரணானது.
எனவே, முழுமையான சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட சமூக உடன்படிக்கை ஒன்றின் பின்னரே அரசியலமைப்பு உருவாக்கப்படவேண்டும் என்றும், அவ்வரசியலமைப்பிலும் தனி அலகுக்கான சுயநிர்ணய உரிமை முழுமையாகத் தக்கவைக்கப்படவேண்டும் என்றும் தெளிவான கொள்கை தாயகத்திலுள்ள பொது அமைப்புகளால் வகுக்கப்படுவது காலத்தின் தேவையாகிறது.
ஏற்கனவே குறிப்பிடப்பட்ட ஐ.நா. மன்றுக்குள்ளான uti possidetis juris என்ற நடைமுறைக்குள் மட்டுப்படுத்தப்படாமல் ஈழத்தமிழர் சுய நிர்ணயக் கோரிக்கை முன்னெடுக்கப்பட ஏதுவாக இன்னோர் நியாயப்பாட்டினையும் எடுத்தாளலாம்.
தன்னாட்சியதிகாரத்துக்கான சமாதான வழிமுறைகள் அனைத்தும் முயற்சிக்கப்பட்டு அவை ஏற்கனவே மறுக்கப்பட்டுள்ள சூழலில், இறுதி வழிமுறையாக (last resort) பரிகாரப் பிரிவினை (Remedial Secession) என்பதாக சுயநிர்ணய உரிமையை நியாயப்படுத்தும் சர்வதேச வழமைச் சட்டத்தின் (Customary International Law) பாற்பட்டதே அந்த வழி.
அதாவது, நேரடியாக எழுத்து மூலமாக யாக்கப்பட்ட சர்வதேசச் சட்டத்துக்கு (codified International Law) அப்பாற்பட்ட சர்வதேச வழமைச் சட்டம் ஏற்கனவே வழங்கப்பட்ட தீர்ப்புகளையும் ஏனைய ஏற்றுக்கொள்ளப்பட்ட கடப்பாடுகளையும் அடியொற்றிப் பின்பற்றப்படுவது.
பிரித்தானியாவுக்கு எதிராக முன்வைத்த சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையின் நியாயத்தோடு (Reversion to sovereignty) பரிகாரப் பிரிவினை (Remedial Secession) என்ற சர்வதேச வழமைச் சட்ட நியாயத்தையும் தந்தை செல்வா வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில் சேர்த்து இரட்டித்த நியாயப்பாடாக கூர்ப்பெய்தவைத்து சுயநிர்ணய உரிமையை நியாயப்படுத்தினார்.
அதேவேளை, அளப்பரிய தியாகங்களைச் செய்ய முன்வருமாறும் வட்டுக்கோட்டைத் தீர்மானம் ஈழத்தமிழர்களை வேண்டியது.
இந்த மக்களாணை பெற்ற தீர்மான முடிவின் படி போராடிப் பெற்ற இறைமை (Earned sovereignty) என்ற அடிப்படை 2009 ஆம் ஆண்டுவரை ஈழத்தமிழர்களின் ஒப்பற்ற தலைமையால் முன்னெடுக்கப்பட்டது.
சோல்பரி யாப்பின் 29(2) உபவிதி தரும் குறைந்தபட்ச நீக்கப்படவியலாக் காப்புரிமை (entrenched safeguard) மீறப்பட்டது தொடர்பாக பிரித்தானிய கோமறை மன்றின் தீர்ப்புகளையும், அவற்றில் இருந்து தப்பும் முகமாக இலங்கை மேற்கொண்ட ஒருதலைப்பட்ச நடவடிக்கைகளும் தந்தை செல்வா எடுத்தாண்ட பரிகாரப் பிரிவினைக்கு இடமளிக்கும் சுயநிர்ணய உரிமையைப் பலப்படுத்துகின்றன. இது தொடர்பாகவும் பிரித்தானியாவுக்கு ஈழத்தமிழர் தேசம் தொடர்பான பொறுப்புக்கூறல் உண்டு.
இவை தொடர்பில், பிரித்தானியாவின் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட
Ceylon Independence Bill 1947,
Sri Lanka Republic Act 1972 ஆகிய சட்டவாக்கங்கள் குறித்து பிரித்தானியாவில் வாழும் ஈழத்தமிழர்கள் எதிர்ப்பியக்கங்களை முன்னெடுக்கவேண்டிய தேவையுள்ளது.
இந்த அடிப்படைகளை உணர்ந்து, எந்தவிதத்திலும் சுயநிர்ணய உரிமையைக் கீழிறக்காமல் முழுமையானதாக அது எடுத்தாளப்படவேண்டும்.
காலனித்துவத்திலிருந்து விடுதலை பெறாமல், ஐரோப்பிய காலனித்துவம் சிங்கள காலனித்துவத்தால் மாற்றீடு செய்யப்பட்டுள்ளது என்பதைப் பிரகடனம் செய்ததிலும், வரலாற்று இறைமை, பண்பாட்டு இன அழிப்பு என்பவற்றை எடுத்தாண்டதிலும், சர்வதேச வழமைச் சட்டத்தின் பாற்பட்ட பரிகாரப் பிரிவினைக்குரிய கடைசி வழியாக சுயநிர்ணய உரிமையை நிறுவியதிலும் முன்மாதிரியாக வட்டுக்கோட்டைத் தீர்மானம் 1976 ஆம் ஆண்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது. இதுவே ஈழத்தமிழரின் Magna carta.
காலப் போக்கில், சர்வதேச வழமைச் சட்டத்தில் மீறவொண்ணா வழமை (jus cogens norm) என்ற அடுத்த கட்ட நியாயப்பாட்டு வளர்ச்சியை சுயநிர்ணய உரிமை பெற்றுவருகிறது.
அதாவது, இன அழிப்பு தொடர்பான அரச பொறுப்பு எவ்வாறு விசாரணைக்கு உலக நீதிமன்றில் உட்படுத்தப்படலாமோ, அதேபோல சுயநிர்ணய உரிமையை ஆக்கிரமிப்பு அரசொன்று மறுத்துவருவது பற்றிய அரச பொறுப்பும் விசாரணைக்கு உட்படுத்தப்படும் சூழல் விரைவில் தோன்றும் வகையில் சர்வதேச நீதிச் சூழல் வளர்ச்சிபெற்று வருகின்றது.
சுயநிர்ணய உரிமை தொடர்பில் சர்வதேசச் சட்டம் சார்ந்த, எமது வரலாற்று நிலைப்பாடுகளைப் பற்றுக்கோடாகக் கொண்டு அனைத்தையும் கூர்ப்பியற் போக்கில் ஒன்றிணைத்து முன்னெடுப்பதற்குப் பதிலாக, சுயநிர்ணய உரிமையில் “குறைந்தபட்சம் - அதியுச்ச பட்சம்” என்றவாறு அளவுகோற் பிரிப்பை மேற்கொள்வதும், ஆறாம் சட்டத்திருத்தம் என்ற பூச்சாண்டியைப் பார்த்து மிரளுவதும் கொள்கை சார் விடுதலை அரசியலுக்கும் ஈழத்தமிழர் தேசக்கட்டலுக்கும் முற்றிலும் முரணானது.
1947, 1972, 1978 ஆம் ஆண்டுகளில் தமிழ் மக்கள் ஆணையின்றி நிறைவேற்றப்பட்ட ஒற்றையாட்சி இன அழிப்பு இலங்கை அரசின் அரசியலமைப்புக்கு உட்பட்ட 13 ஆம் திருத்தமோ, அல்லது கூட்டாட்சி என்ற கோரிக்கையை எழுந்தமானதாக முன்வைக்கும் நகர்வோ ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையைப் புறக்கணிப்பதாகவும்,
வட்டுக்கோட்டைத் தீர்மான மக்களாணைக்கும்
திம்புக் கோட்பாடுகளுக்கும்
இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபை (ISGA) என்ற தீர்வுத் திட்ட வரைபுக்கும் ஒவ்வாததாகவும் ஆகிவிடுகிறது.
“சிந்தனையானது மொழியைக் கேடாக்கினால், மொழி சிந்தனையைக் கேடாக்கும்” (“But if thought corrupts language, language can also corrupt thought”) என்று ஜோர்ஜ் ஓர்வல் எடுத்தியம்பியது அரசியற் தமிழின் கேடுற்ற நிலையைச் சிந்திக்கையில் நினைவுக்கு வருகிறது.
தமிழ் ஆட்சி மொழியாக இல்லாமையாலும், தமிழர்களுக்கென்று ஓர் அரசு இன்மையாலும், அரசியற் தமிழ் உலக வளர்ச்சிக்கேற்ப வளரவில்லை.
இதனால், சர்வதேசச் சட்டங்களைப் புரிந்துகொள்வதும், அரசறிவியலில் தெளிவாகச் சிந்திப்பதும், சர்வதேச அரசியலின் சூட்சுமங்களை விளங்கிக்கொள்வதும் தமிழிலே சிந்திக்கவேண்டியவர்களிற் பலருக்குச் சரிவரக் கைகூடுவதில்லை.
கிணற்றுத் தவளைகள் போல, தமக்குத் தாமே போட்டுக்கொண்டுள்ள மட்டுப்படுத்தப்பட்ட அறிவு எல்லைகளுக்குள்ளும் மொழிச் சிக்கலுக்குள்ளும் சிக்குண்டு, போதாமைக்குச் சமூக வலைத்தளங்களில் பரவுபவற்றில் நல்லது எது தீயது எது என்று பிரித்தறிய இயலாத நிலைக்குள் நின்று, தமக்குத் தெரிந்தது கைமண் அளவு என்பதை மறந்து, தற்செருக்கோடு செயற்படும் தன்மை பொது முயற்சிகளில் ஈடுபடுவோரிடையே பாரிய அவல நிலையாக உருவெடுத்துள்ளது.
தேற்றங்களை நிறுவுதலைப் போன்று கொள்கைகள் வடிவமைக்கப்படவும், எழுதப்படும் வரிகளுக்கிடையில் இரத்தினச் சுருக்கமாகச் சொல்விரயமின்றித் தெளிவாகப் புரியவைக்கவேண்டியதைச் சர்வதேசத் தரப்புகள் புரிந்துகொள்ளும் வண்ணம் வெளிப்படுத்தவும், சிந்தனையும் மொழியும் பின்னிப்பிணைந்த, சட்டமும் அரசியலும் இணைந்த, மொழிப் புலமை முக்கியமானது.
2013-2014 ஆம் ஆண்டுப்பகுதியில் தமிழ் சிவில் சமூக நகர்வு முன்னெடுக்கப்பட ஆரம்பித்த போது இந்தத் திறமை முன்மாதிரியாக வெளிப்பட ஆரம்பித்திருந்தது. ஆனால், ஒரு சில ஆண்டுகளுக்குள் அந்தப் போக்கு மங்கிவிட்டது.
சட்டம், கல்வி, ஊடகத்துறைகளில் இருந்து இராணுவத் துறைவரை “unambiguity”, “to the point”, “less is more”, “KISS (Keep It Simple, Stupid) method” என்று பலவிதமாக இந்த நுட்பம் எடுத்தியம்பப்படுகிறது.
ஆங்கில மொழியில் வேண்டிய சுருக்கத் தன்மைக்கு இடமில்லாத போது, சட்டத்துறையில் இலத்தீன் மொழியிலான கலைச் சொற்களைக் கையாளும் வழமை இருப்பதை ஏற்கனவே இக்கட்டுரையில் குறிப்பிட்ட சில உதாரணங்கள் எடுத்துக்காட்டியிருக்கும்.
இவை சார்ந்த அறிவியற் திறமைகளை வளர்த்துக்கொள்ளாது, கொள்கைகளை நீட்டி விரித்து எழுதப் புறப்பட்டு, அவற்றைப் பலவாய் இலக்கமிட்டுப் பெருக்கி, புலம்பலாக ‘அலம்புவது’ புலமையற்ற செயற்பாடாகும்.
இந்தக் கைங்கரியத்தில் ‘தமிழ் மக்கள் பொதுச்சபை’ என்ற அமைப்பு தற்போது களம் இறங்கியுள்ளதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.
இதைத் திருத்தவேண்டியது அவ்வமைப்பில் ஈடுபடுவோருக்கும் ஈழத்தமிழர் சமூகத்துக்குமான ஒட்டுமொத்தச் சவாலாக அமைகிறது.
அரசியற் தமிழ் மொழியின் நிலை கேடாயிருப்பதும், ஆங்கில மொழிப் புலமை குறைவாயிருப்பதும், திரிபுவாதத்தை கருவியாக்கி அரசியல் செய்யும் இரு மொழித் திறமை கொண்ட அரசியல்வாதிகளுக்கு மேலும் வாய்ப்பாகிவிடுகிறது.
ஆதலால், மொழியிலும் சிந்தனையிலும் ஆழமான கரிசனையோடு கொள்கைகள் வெளிப்படுத்தப்படவேண்டும். புலம்பல்களாக அன்றி, தேற்றங்கள் போல அவை வெளிப்படவேண்டும்.
வட்டுக்கோட்டைத் தீர்மானம் ஒன்றே உறுதியும் இறுதியுமான ஈழத்தமிழர் அரசியல் வேணவா (அரசியல் அபிலாசை) பற்றிய மக்களாணை கொண்டது என்பதை நினைவிற் கொள்ள வேண்டும்.
அதை விடுத்து,
வட்டுக்கோட்டைத் தீர்மானம் அதியுயர் இலக்கு என்றும் திம்புக்கோட்பாடுகள் குறைந்த இலக்கு என்றும் கூடியது-குறைந்தது (maximum vs minimum) என்று சுயநிர்ணய உரிமைக்கு அளவுகோலிடுவதும், ஈழத்தமிழர் சுய நிர்ணயத்தை வெளியகம்-உள்ளகம் என்று பிரித்துச் சித்தரிப்பதும், அரசியற் தீர்வு குறித்த புதிய மக்களாணை பற்றிப் பேசுவதும் ஜோர்ஜ் ஓர்வல் சொன்னது போல் ஊழற் சிந்தனையாகும்.
ஆக்கிரமிக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர் தாயகத்தில் உள்ள எந்தப் பொது அமைப்பாயினும் முதலில் ஈழத்தமிழர் தேசத்தின் சுயநிர்ணய அலகுக்குரிய (self-determining unit) மறுக்கவொண்ணா சுயநிர்ணய உரிமையைச் (inalienable right of self-determination) சரிவரப் புரிந்து கையாளத் தன்னைப் பழக்கிக்கொள்ள வேண்டும்.
ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கு மூன்றுவிதமான இறைமைப் பின்னணிகள் உள்ளன: (1) வரலாற்றுவழிவந்த இறைமை, (2) போராடிப்பெற்ற இறைமை, (3) இன அழிப்பிலிருந்து பாதுகாக்கப்படுவதற்காக உலகத்தால் வழங்கப்படவேண்டிய (பரிகார) இறைமை. இதை ஈழத்தமிழர் இறைமைப் புரிந்துணர்வு எனலாம். இது
2012 ஆம் ஆண்டிலே வெளிப்படுத்தப்பட்டுவிட்டது.
முழுமையான சுயநிர்ணய உரிமையைத் தக்கவைக்கும் வழியில் மூலோபாயக் கொள்கை இலங்கை அரசியலமைப்பின் எந்தக் கட்டுப்படுத்தலுக்கும் அப்பாற்பட்டதாக நியாயப்படுத்தப்படவேண்டும்.
ஈழத்தமிழர் தேசம் எனும் போது, புலம்பெயர் ஈழத்தமிழர் அதில் ஓர் இணைபிரியா அங்கம் என்பதும் வெளிப்படுத்தப்படவேண்டும்.
தீவுக்கு வெளியேயுள்ள தமிழீழரும், தமிழ் நாட்டவரும் ஏனைய உலகத் தமிழரும் வட்டுக்கோட்டைத் தீர்மான மக்களாணையின் படி தமது நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போக்கோடு, ஆக்கிரமிக்கப்பட்ட தாயகத்தில் கூட்டாட்சி கதைக்கும் கட்சிகளும் பொது அமைப்புகளும் ஒவ்வா நிலையை ஏற்படுத்துகின்றன.
இதைப் போலவே, நீட்சியான இன அழிப்பு (protracted genocide) தொடர்பான நிலைப்பாடும் முக்கியமானது.
இன அழிப்புக்கான நீதிகோரல் பற்றிய கொள்கை பேசப்படும் போது, அதன் சட்ட நியாயாதிக்கத்தை ஆள்புல நியாயாதிக்க (territorial jurisdiction) அடிப்படையிலும், காலவெல்லை நியாயாதிக்க (temporal jurisdiction) அடிப்படையிலும் செல்லுபடியாகும் உச்ச நியாயாதிக்கங்களை உள்ளடக்குவதாக வரையறுக்கவேண்டும்.
இன அழிப்புக்கான நீதிகோரலை மேற்கொள்ளும் போது அதற்குள் உள்ளடங்கும் ஏனைய குற்றங்களை (போர்க்குற்றங்கள், மானுடத்துக்கெதிரான குற்றங்கள்) அதற்குச் சமாந்தரமாக அதுவும் இதுவும் என்ற தோரணையில் அடுக்கக் கூடாது. அதைப் போலவே அவை அனைத்துக்கும் பொதுமையான பெருங்குற்றங்கள் (mass atrocities) போன்ற பொதுச் சொல்லாடலுக்குள் இன அழிப்பு என்ற அதியுயர்க் குற்றத்தைப் புதைத்தல் ஆகாது.
தெளிவற்ற பலபொருள்படும் தன்மைக்கு (ambiguity) ஒருபோதும் இடமளிக்கக்கூடாது.
ஏற்கனவே சுட்டிக்காட்டப்பட்டது போல,
ஐ.நா.வில் எது சாத்தியம் எது சாத்தியமில்லை என்பதை வைத்து ஈழத்தமிழர் கோரிக்கைகளும் அவர்தம் கொள்கை சார் விடுதலை அரசியலின் படிமுறைகளும் வடிவமைக்கப்படல் ஆகாது.
எமது விடுதலைப் போராட்ட அரசியல் வரலாற்று நியாயப்பாடுகளின் வெவ்வேறுபட்ட படிநிலைகளின் கூர்ப்புத் தன்மையோடு உலகப் பரப்பை நோக்கிய கொள்கை சார் விடுதலை அரசியல் முன்னெடுக்கப்படவேண்டும்.
சாத்தியமில்லை என்று வல்லாதிக்க உலக ஒழுங்கு கருதுவதைச் சாத்தியமாக்குவதே போராட்டமும் அதற்கான கொள்கை சார் விடுதலை அரசியலுமாகும்.
“பதின்மூன்றாம் சட்டத்திருத்தத்தில் ஆரம்பம்”, “பதின்மூன்றுக்கும் மேலிருந்து ஆரம்பம்”, “கூட்டாட்சி”, “ஜனாதிபதி ஆட்சியென்றால் இணைப்பாட்சி, நாடாளுமன்ற ஆட்சியென்றால் கூட்டாட்சி,” போன்ற இரண்டுங்கெட்டான் நிலைப்பாடுகளை ஒவ்வொரு தரப்பும் தமக்கேற்ற வகையில் கையாண்டு பலபொருள்படும் தன்மையை சர்வதேச அரங்கில் உருவாக்குவதற்கு இனிமேலும் இடமளித்தல் ஆகாது.
அத்தோடு, நீட்சியான இன அழிப்பு (protracted genocide) தொடர்பாகவும், காலத்துக்குக் காலம் ஈழத்தமிழர் தாயக எல்லைகள் குடியமைவை (demography) மாற்றும் நோக்கோடும், தமிழர் தாயக ஆட்சிப்புல ஒருமைப்பாட்டை (territorial integrity) சிதைக்கும் நோக்கோடும் முன்னெடுக்கப்பட்டுவரும் திட்டமிட்ட குடியேற்ற காலனித்துவம் (Sinhala Settler Colonialism) தொடர்பாகவும் தெளிவான வரையறைகள் மேற்கொள்ளப்படவேண்டும்.
சுயநிர்ணய உரிமையின் பாற்பட்ட பொதுவாக்கெடுப்பில் வாக்களிக்கும் உரிமைக்குரியவர்கள் யார், எந்த ஆண்டுக்குப் பின்னர் மேற்கொள்ளப்பட்ட சிங்களக் குடியேற்றம் தமிழர் தாயகக் கோட்பாட்டைச் சிதைப்பதென்ற திட்டத்தோடு ஆரம்பிக்கப்பட்டதோ அந்த ஆண்டுக்குப் பின்னர் குடியேறியவர்களும் அவர்வழி வந்தோரும் அவ்வாறான பொதுவாக்கெடுப்பில் கலந்துகொள்ள முடியாது போன்ற நிலைப்பாடுகள் தொடர்பாகவும் தெளிவான எல்லைகளும் வரம்புகளும் வெளிப்படுத்தப்படவேண்டும்.
இவ்வாறு நிறுவப்படும் கொள்கைகளை சர்வதேச மட்டத்தில் ஏற்புடையதாக்கும் வகையில் படிநிலைச் செயற்பாடுகள் நடைபெற வேண்டும்.
இதற்கு ஏதுவான முதற்படியாக ஈழத்தமிழர் தாயகம் ஓர் ஆக்கிரமிக்கப்பட்ட தாயகம் (Occupied Homeland) என்பதைக் கட்சிகள் உள்ளிட்ட அனைத்து ஈழத்தமிழர் தரப்புகளும் இணைந்து பிரகடனப்படுத்த முன்வர வேண்டும்.
ஆக்கிரமிக்கப்பட்ட தாயகமும் அதன் தேசமும் எனப்படுவதன் நியாயப்பாடு நிறுவப்படவேண்டும்.
அடுத்த படிநிலையாக, நீட்சியான இன அழிப்புத் தொடர்பாக ஏற்கனவே வடமாகாண சபை நிறைவேற்றிய தீர்மானத்தை விட மேலும் தெளிவாகவும் கச்சிதமாகவும் நிறுவப்படுவதாக தாயகத்துக்கு உள்ளே முழுத் தமிழர் தாயகத்தையும் இணைத்ததாக அடுத்தகட்டத் தீர்மானம் வெளியாகவேண்டும்.
இந்த இரண்டு படிநிலைகளும் கொள்கை ரீதியான இணக்கப்பாட்டோடு இணைந்து முன்னெடுக்கப்பட்டால் பொதுவாக்கெடுப்பு (referendum) என்ற நிலைப்பாடு தீவுக்குள்ளிருந்து தெளிவாக வலியுறுத்தப்படுவது சாத்தியமாகும்.
கூட்டாட்சிக்குப் (federation) பதிலாக இணைப்பாட்சி (confederation) என்ற நிலைப்பாட்டை ஐயந்திரிபறவும் மனவுரத்தோடும் தீவுக்குள்ளிருந்து வலியுறுத்த இந்தப் படிமுறைகள் இடமளிக்கும்.
மாறாக, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சொல்வது போலவோ, தற்போதுள்ள தமிழரசுக்கட்சி சொல்வது போலவோ எழுந்தமானமாகக் கூட்டாட்சி என்று கொள்கை வகுக்கப்பட்டால், சுயநிர்ணய உரிமையைத் தக்கவைக்க முடியாத தீர்வுத்திட்டங்களே பிரேரிக்கப்படும்.
பல விதங்களில் மேற்குறித்த புரிதலோடும் திறமையோடும் தமிழ் சிவில் சமூகம், தமிழ் மக்கள் பேரவை ஆகிய முன்னெடுப்புகள் 2013-2014 காலப்பகுதியில் சிறப்பாக ஆரம்பித்திருந்தன. ஆனால், அவையும் நாளடைவில் மூலோபாய ரீதியில் தவறிழைத்தன.
அதற்கு எடுத்துக்காட்டு தமிழ் மக்கள் பேரவை முன்வைத்த கூட்டாட்சித் தீர்வுத்திட்டத்தின் அவசர கால அதிகாரம் பற்றிய உறுப்புரை 21.1.
ஒருபுறம் சுயநிர்ணய உரிமையை எடுத்தாள்வதான எடுகோளுடன் எழுதப்பட்ட அந்தத் தீர்வுத் திட்டம் மறுபுறம் அதே சுயநிர்ணய உரிமையை மறுப்பதாகவும் எழுதப்பட்டுள்ளது.
எழுந்தமானமான கூட்டாட்சிக் கோரிக்கையும் தேர்தல் அரசியலும் ஈழத்தமிழரை எங்கே இட்டுச் செல்லும் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு.
இதையே இன்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தனது தீர்வுத்திட்டமாகச் செப்பித்துக் கொண்டிருக்கிறது என்பது விந்தையிலும் விந்தை!
அதை நினைவுபடுத்தி இந்தக் கட்டுரையை முடிவுசெய்யலாம்:
“21.1 மாநில அரசாங்கம் ஒன்று சமஷ்டியில் இருந்து அரசியல் அமைப்புக்கு முரணான வகையில் பிரிவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றது என்றும் அவ்வாறான பிரிவு உடனடியானதொன்று என மத்தியின் தலைவர் திருப்திப்படுமிடத்து, அவர் அவசரகால நிலையினைப் பிரகடனப்படுத்தலாம். அவ்வாறு பிரகடனப்படுத்துமிடத்து ஆளுநர் நிறைவேற்று அதிகாரங்களையும் மற்றும் முதலமைச்சரினதும் மாநில அமைச்சரவையினதும் அதிகாரங்களையும் அந் நிலைமைகளுக்கு ஏற்றவாறு, பொறுப்பெடுத்துக்கொள்ளலாம்.”
எமது தலையில் நாமே மண்ணை அள்ளிப் போட்டுக்கொள்ளும் வரைபுகளை நாமே முன்வைப்பதற்கு இதைவிட வேறு எடுத்துக்காட்டு எதுவும் தேவையில்லை.
இவ்வாறான விஷப்பரீட்சைகளில் தமிழ் மக்கள் பொதுச்சபை ஈடுபடாது ஆக்கபூர்வமான திசையில் அதன் நகர்வுகள் முன்னெடுக்கப்படவேண்டும்.
அதை உறுதிப் படுத்திக்கொள்வது ஒட்டுமொத்த சமூகத்தின் கடமையாகிறது.
Related Articles:31.01.15
Nationhood, Self-Determination non-negotiable: V.T. Thamilma.. 26.08.13
Fundamentals diluted behind the scene in Colombo 18.10.09
Addressing ambiguity of Right to Self-Determination 19.09.09
Vaddukkoaddai and Thimphu 01.11.03
Tigers release proposal for Interim Self Governing Authority
Chronology: